Tuesday, May 5, 2009

குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் பிரபாகரன்; தப்ப முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு


‘பிரபா தமிழ்மக்களுக்கு செய்தநிர்மாணப்பணிகள் மண் அணைகள் அமைத்தது தான்’

புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் குறுகிய பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருக்கிறார் என்பதை எமது புலனாய்வுப் பிரிவினர் ஊர்ஜிதம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முடியாதவாறு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

‘பிரபா தமிழ்மக்களுக்கு செய்தநிர்மாணப்பணிகள் மண் அணைகள் அமைத்தது தான்’ பயங்கரவாதிகள் நாட்டில் விரித்த வலையில் அவர்களே விழுந்துள்ள நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவசரகாலச் சட்டத்தை சமர்ப்பித்து மேலும் பேசுகையில்:- ஒரு பாரிய போராட்டத்திற்கு முடிவை கண்டு கொண்டிருக்கின்ற அதேவேளை மற்றுமொரு போராட்டத்திற்கு முகம் கொடுக்கவும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்ற வேளையிலேயே நாம் இருக்கிறோம். 

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் இன்று நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். புலிகளிடமிருந்து தப்பிவரும் மக்களை மீட்பதுடன் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம். அத்துடன் வடக்கின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் அடுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

இந்த சவால்களை வெற்றிபெற தேவையான அணைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்கள் இதனை அனுமதிக்கின்றதுடன் பூரண நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

புலிகள் பலாத்காரமாக தடுத்து வைத்திருந்த மக்கள் மரண பயத்திலிருந்தும் மீண்டு கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அடைக்கலம் தேடிவந்தனர்.

500, 1000 அல்ல ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்றும், விடுதலைக்காக போராடுபவர்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் தங்களது பாதுகாப்புக்காக தங்களது விடுதலைக்காக மக்களை பணயமாக வைத்தனர். சுட்டுக் கொன்றனர். துன்புறுத்தினர். நாம் பெற்றுக் கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த மக்கள் தப்பி வந்தனர்.

பல மணி நேரங்களை சந்தர்ப்பமாகப் பெற்றுக் கொடுத்ததால் மக்கள் தப்பி வந்தனர். அவர்களது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக வந்தனர்.

எமது அரசு அந்த மக்களுக்கு வழங்கிய புதுவருட பரிசாக இந்த சந்தர்ப்பத்தைச் சிலர் கூறினார்கள். சிலர் இதனை போர் நிறுத்தம் என்று கூறினர். அது முற்றிலும் தவறானது. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை எமது அரசு திட்டவட்டமாகக் கூறியிருந்தது.

உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் புலிகளுடன் என்ன போர் நிறுத்தம் வேண்டிக் கிடக்கிறது?

போர் நிறுத்தம் என்ற பெயரில் புலிகள் இதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை எவரும் மறந்துவிட மாட்டார்கள்.

பணயக் கைதிகளாக வைத்திருந்த மக்களை மீட்டெடுத்ததன் மூலம் எமது படையினர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செயலை செய்துள்ளார்கள்.

போர் புரிவதுடன், உயிர்த் தியாகம் செய்வதற்கும், உயிரை பாதுகாக்கவும் முடிந்தவர்கள் நாம் என்பதை படையினர் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

பயங்கரவாதிகளால் மரணத்தை சந்திப்பதற்கு தயாராயிருந்த பால்மணம் மாறாத பச்சிளம் பாலகர்களையும் படையினர் மீட்டுள்ளார்கள். ஒழுக்கம் நிறைந்த படையினர் என்றும் இப்படித்தான் இருப்பார்கள். ஏனைய நாடுகளிலுள்ள படையினருக்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். 

எந்நேரமும் உலகுக்கு பல தடவைகளில் இந்த எடுத்துக்காட்டை காட்டியிருக்கிறார்கள். அதனால்தான் எம்மை கொல்வதற்காக வரும் பயங்கரவாதிகளுக்கு உண்ண உணவு கொடுத்திருக்கிறோம். ஆனால், பயங்கரவாதியோ உணவு கொடுத்த கையையே பாய்ந்து கடிக்கும் குணம் கொண்டவனாக இருக்கிறான். எமக்கு மட்டமல்ல உலகுக்கே இதனை பயங்கரவாதிகள் காட்டியிருக்கிறார்கள்.

மக்கள் பட்டிணியுடன் இருக்கும் போது தனது மனைவி மக்களுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள் என்பதை மக்கள் இன்று அறிவார்கள். மக்கள் முன்பும் அறிந்திருந்திருந்தார்கள். ஆனால் வெளி உலகுக்குச் சொல்ல முடியாமல் இருந்தனர்.

இன்று அந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். பிரபாகரன் என்பவர் கனவு உலகில் சஞ்சரிக்கும், இரத்தவெறி பிடித்த கொலைகாரன் என்பதை மக்கள் இன்று கருதுகிறார்கள். எவருக்கும் பயந்து மக்கள் இதனை கூறவில்லை. அந்த அப்பாவி மக்களின் நேர்மையான கருத்துக்களே அவை.

இப்போது எமது நேர்மையை அந்த மக்களுக்கு காட்டும் நேரம் வந்துவிட்டது. மக்களை புலிகளிடமிருந்து மீட்பது போன்று பாதுகாக்கவும் வேண்டும். இது எமது பொறுப்பு.

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இந்த பொறுப்பு உண்டு. அவர்கள் எமது சகோதர மக்கள் என்பதாலேயே இந்தப் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

முன்னேறிச் செல்லும் படையினர் புலிகளிடமிருந்து அதிக விலையுள்ள ஆயுதங்களை மீட்டுள்ளனர். கனரக ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று கூறிய புலிகள் ஒரு பாடசாலையோ, சனசமூக நிலையமோ விளையாட்டரங்கோ செய்து கொடுத்ததில்லை. பதிலுக்கு பாரிய அழிவுகளையே கொடுத்துள்ளனர். இன்று வடக்கில் பார்க்கும் இடமெல்லாம் தெரிவது மண் அணைகள்தான். தங்களது பாதுகாப்புக்காக அரண்களையே அமைத்துள்ளார்கள். இவைதான் அவர்கள் தமிழ் மக்களுக்காகச் செய்த நிர்மாணிப்புகள்.
பிரபாகரன் என்ற நபர் இன்று மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கி இடம்பெயர் முகாம்களுக்குள் முடக்கி விட்டிருக்கிறார். எமது சிலரும் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமரின் உரைக்கு நடுவே ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ழிZlகீடு செய்தார்.

வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் சுமார் 4 கிலோ மீற்றர் பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புலிகளின் தலைவர் அங்குள்ளாரா? அல்லது தப்பிச் சென்றுவிட்டாரா? எனக் கேட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் போதே பிரபாகரன் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே இருக்கிறார் என்பதை எமது புலனாய்வுப் பிரிவு ஊர்ஜிதம் செய்துள்ளது என்று குறிப்பிட்டார்
.

 06.05.2009

No comments: