Monday, May 26, 2008

கிழக்கின் தேர்தல் எதிர்பார்த்தது போலவே நிறைவடைந்துள்ளது

இருபது வருடங்களின் பின்னர் பிரிந்த கிழக்கின் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைத்துவிட்டு நடந்து முடிந்துள்ளது. முஸ்லிம்களைப்பொறுத்தவரையில் இத்தேர்தல் முடிவுகள் பல்வேறு உண்மைகளையும் படிப்பிணைகளையும் விட்டுச்சென்றுள்ளது. ஒவ்வொருகட்டங்களிலும் நாமும் எமது அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் படிப்பினைபெறுபவர்களாகவே இருக்கப்போகின்றோமா என்ற பெரிய வினாவுடன் இப்பத்தியை வரைகின்றேன். கிழக்கின் தேர்தல் முஸ்லிம்களின் உண்மையான பலத்தை வெளிப்படுத்தும் ஒரு அரிய சந்தர்ப்பமாகவே எமக்கு முன்னால் வந்து நின்றது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் ஒரு இருப்பு இருக்கின்றது, இனப்பிரச்சினையில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், முஸ்லிம்களும் ஒரு தனியான இனமாக, தனியான தரப்பாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும், அதனை தேசிய சர்வதேசிய ரீதியில் நிருவுவதற்கும் கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே கிழக்கின் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எமது தலைவர்கள் என கூறிக்கொள்ளும் சுயநல வியாபாரிகளின் செயற்பாடுகளினால் எமது சமூகம் மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது.

தேர்தலுக்கு முன்னமே முஸ்லிம்தரப்பு குறித்த தேர்தலில் எவ்வாறு பங்கேற்கப்போகின்றது என்பது குறித்து பலரும் பல கருத்துக்களை முன்வைத்திருந்தனர். ஒரு சிலர் முஸ்லிம் தரப்பு அரசுடன் இணையவேண்டும் என்றும், இன்னுமொருசாரார் முஸ்லிம்தரப்பு தனித்துப்போட்டியிடவேண்டும் என்றும் வலுவாக விவாதித்துக்கொண்டிருக்கையில், அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள அமைச்சர்கள் மு.காவின் சின்னத்தில் அல்லாது வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு மு.காவை அழைத்தனர், இதன் பின்னால் உள்ள நயவஞ்சகத்தனத்தை முதன்மைப்படுத்தி ரவூப் ஹக்கீம் மேற்படி முன்மொழிவை நிராகரித்தார்.

“இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச சந்தையொன்றின் வியாபாரப்பண்டம்” என்ற கருத்து குறித்த தேர்தலின் மூலம் மீண்டும் நிரூபனமாகியுள்ளது. மகிந்தவின் அரசும் பேரினவாத சக்திகளும் இந்தியாவின் நிழலின் கீழ் ஒரு அணியாகவும். எதிர்கட்சி, விடுதலைப்புலிகள் மேற்கத்தேய அரசுகளின் நிழலின் கீழ் ஒரு அணியாகவும் திரண்டு யார் இனப்பிரச்சினை விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக கையில் எடுப்பது என்று பலப்பரீட்சை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். எனவே கிழக்கின் தேர்தல் இரு சாராருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருந்தது. இங்கு வேதனை தருகின்ற விடயம் என்னவென்றால் மேற்படி சூதாட்டத்தில் முஸ்லிம் தரப்பும் பங்கேற்றுக்கொண்டதுதான். மகிந்தவை கிழக்கின் மாகாணசபைத்தேர்தலுக்குல் வலுக்கட்டாயமாக இழுத்துவந்தது ஐ.தேசியக்கட்சியும் இந்தியாவும்தான். ஐ.தே. தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மீண்டும் மீண்டும் கூறித்திரிந்தது, மறுபக்கத்தில் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும்படி அதிக அழுத்தம் கொடுத்தது. எனவே மகிந்த மேற்படி இரு நிலைகளின் சாதகங்களின் அடிப்படையில் தேர்தலில் குதித்தார். திரைமறைவில் ஏராளமான விடயங்கள் அரங்கேறி முடிந்தன.

ரவூப்ஹக்கீமும் தனது பங்கிற்கு தானும் தனித்தே போட்டியிடப்போவதாக அறிவித்தார், கருத்துக்கணிப்புகள் செய்தார், புத்திஜீவிகள் மார்க்க அறிஞ்ர்களை சந்தித்தார், என்றாலும் இறுதியில் தான் ஐ.தேவுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார், ஹிஸ்புல்லாஹ் உடனடியாக கட்சிதாவினார், தன் குற்றங்களை மறைக்க அவருக்கு கட்சி தாவலைவிட வேறு எதுவும் கை கொடுக்காது என்பது அவருக்கு நன்கு தெரிந்தவிடயம். பதிலுக்கு மு.கா தலைவர்,தவிசாளர்,கூடவே பொதுச்செயலாளர் என மூன்று முக்கியபுள்ளிகள் தமது பாராளுமன்ற ஆசனங்களை துரந்து சமூகத்தின் நலன்கருதி கிழக்கை கைப்பற்றுவோம் என்று வீராப்புடன் களமிறங்கினர்.

தேர்தல் தினமும் வந்தது இருபக்கத்தின் வியாபாரிகளும் தமது நலனுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக எதையும் செய்யத்துணிந்தனர், மு.கா வளர்த்துவிட்ட பாயிஸும், ரிஷாதும் மு.காவிற்கு எதிராகவே மு.காவின் தாயகத்தில் வன்முறைகள் செய்ததாக அறியக்கிடைத்தது. இறுதியாக அரசு வெற்றிபெற்றதாக தேர்தல் முடிவுகளும் வெளியாகின.

மு.கா மீண்டும் ஒருமுறை ஒப்பாரிவைக்கத்துவங்கியது. நியாயமற்ற தேர்தல், பகற்கொள்ளை என்றெல்லாம் கூறியது, மறுபக்கத்தில் யார் முதலமைச்சர் என்பது குறித்த இழுபறிகள் விவாகாரமாயின. ஆனாலும் இருதரப்பும் தமது எஜமானர்களை திருப்த்திபடுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தினர். மு.காவும் ஐ.தே.கவும் மேற்கைத்தேயர்களை திருப்த்திப்படுத்தவும், ஐ.ம.சு.கூ இந்தியாவையும் திருப்த்திப்படுத்துவதிலுமே அதிக கவனத்துடன் இருப்பது புலப்படுகின்றது. இதனூடாக மட்டுமே தமது நலன்கள் பேணப்படும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

இத்தேர்தலில் முஸ்லிம்தரப்பு இரு அணிகளாகவே களம் கண்டது, ஒன்று அரசுடன் ஒட்டிக்கொண்டுள்ள தற்காலிக முகவர்கள், அடுத்து மு.கா என்னும் முஸ்லிம் சமூக அடையாளம், இதில் தற்காலிக முகவர்கள் குறித்த கவலை அதிகம் எமக்குத்தேவை இல்லை எனினும் மு.கா குறித்தே எமது அதிக கவனம் செல்கின்றது, மு.கா தனது வரலாற்றில் மீண்டும் ஒருதடவை அதள பாதளத்திற்கே சென்றுள்ளது என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது, கிழக்கிழங்கை முஸ்லிம் காங்கிரஸின் தாயக பூமி, இனப்பிரச்சினையில் முஸ்லிம்களி பங்கு அதிகம் சட்டரீதியாக வலுப்படுத்தப்படவேண்டிய தேவயுள்ள சூழலில், முஸ்லிம்கள் ஆயுதக்குழுக்களாலும், புலிகளாலும் அச்சுருத்தப்படும் சூழலில் நாம் தேர்தலை எதிர்கொண்டோம், எனவே தூய்மையாக சமூகநலனை மட்டும் கருத்தில் கொள்ளும் ஒரு கட்சியாக மு.கா இருக்குமாயின் முஸ்லிம்களின் மொத்தப்பலத்தையும் காட்டுவது பொருத்தமா, அல்லது தமது எஜமானர்களின் கனவுகளை நனவாக்குவது பொருத்தமா, மு.கா இரண்டாவதையே செய்யத்துணிந்தது. ஐ.தே.கவின் நலன்களுக்கு துணைபோவதே தனித்துவத்தலைவரின் முடிவாகியது. முஸ்லிம் சமூகத்தின் நலன்குறித்து எதுவித அக்கறையும் இன்றி முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதடவை வேதனை மிகுந்த அரசியல் சூனியத்திற்குள் வலுக்கட்டாயாமக நகர்த்தியதே அவரது சதனைகளாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தனித்துப்போட்டியிடுவதில் என்ன பாதகம் இருக்கின்றது? இந்த வினாவிற்கு இன்னமும் மு.காவிடமிருந்து உருப்படியான பதில் எதுவும் வந்ததாக அறிய முடியவில்லை. தனித்துப்போட்டியிட்டிருந்தால் ஒன்றில் முஸ்லிம்களின் வாக்குப்பலத்தினை மட்டும் வைத்து கிழக்கின் பெறும்பான்மையினைக்கைப்பற்றியிருக்க முடியும் அல்லது மிகப்பிரதான பேரம்பேசும் சக்தியாக திகழ்ந்திருக்க முடியும். இன்னொருகோணத்தில் அரசுடன் ஒட்டிகொண்டுள்ள தற்காலிக முகவர்களின் வாக்குப்பலவீனத்தை நிரூபித்து முஸ்லிம் சமூகத்தின் பிரதான பிரதிநிதியாக மு.காவை நிலைநிருத்தியிருக்க முடியும். மாற்றமாக மு.கா செய்ததெல்லாம் மீண்டும் எமது தனித்துவம் இழந்து பெரும்பான்மைக்கட்சிகளுடன் கூட்டுச்சேரும் வெட்கம்கெட்டசெயலை அறிமுகப்படுத்தியதும், தற்காலிக முகவர்களின் செயற்பாடுகளுக்கு உரமிடும் வகையில் நடந்துகாட்டியதுமேயாகும்.

தொகுதிவாரியான முடிவுகளை நோக்குமிடத்து குறித்த சில தொகுதிகளில் மு.காவின் பலம் சரிவடைந்திருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் பெருன்பான்மைக் கட்சிகளின் தற்காலிக முகவர்களாக செயற்படும் அமைச்சர்கள் தமது வாக்குப்பலத்தை எடைபோடுவதற்கும் மு.கா வழி செய்தது என்றே சொல்லத்தோன்றுகின்றது.

தொகுதிவாரியான முடிவுகளின்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தவிர்ந்த ஏனைய தொகுதிகளை மு.கா இழந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லாத்தொகுதிகளையுமே மு.கா இழந்துள்ளது திருகோணமலை மாவட்டத்தில் மு.கா வெற்றி பெற்றுள்ளது. மிக அதிக அளவிலான தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமே, பொதுவாக ஜனநாயக அலகொன்றில் இத்தகைய மோசடிகள் ஒன்றும் புதிதல்ல, அதுவும் மிகப்பலவீனமான ஜனநாயக அலகொன்றைக்கொண்ட இலங்கைபோன்ற தேசமொன்றில், தமது சொந்த இலாபத்தை அடிப்படையாகக்கொண்ட அரச இயந்திரமொன்று செயற்படும் சூழலில் இத்தகைய மோசடிகள் இடம்பெறாது என்றும், அல்லது அவ்வாறு இடம்பெற்றாலும் கூட அதனை நீதியின் முன் நிறுத்தி சத்தியத்தை நிலைநாட்டலாம் என்று எதிர்பார்ப்பதும் அரசியல் முதிர்ச்சியின்மையினையே காட்டுகின்றது. எனவே உண்மையான திட்டமிடல் ஞானம் உள்ளவர்களாயின் குறித்த ஒரு சூழல் ஏற்படாமல் எவ்வாறு தேர்தலை நகர்த்துவது என்பதில்தான் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டுமே தவிர, நடந்து முடிந்த பின்னர் ஒப்பாரிவைப்பது அழகல்ல. மு.காவைப்பொறுத்தவரையிலும் ரவூப் ஹக்கிமைப்பொறுத்தவரையிலும் இவை குறித்த அறிவு இல்லாதவர்கள் என்பதை ஏற்க முடியாது, மாறாக தமது நிகழ்ச்சிநிரழுக்குள் மேற்படி விவகாரம் முக்கியத்துவமற்ற ஒன்று என்பதாலேயே அவர்கள் குறித்த விடயத்தை விடுத்து மாற்று வழிகளில் சிந்திக்கவும் செய்ற்படவும் துணிந்தனர். அசத்தியம் ஒருபோதும் நிலைக்காது என்பதற்கு மு.காவின் தோல்வியும் ஒரு உதாரணமாகிப்போனது.

மறுபுரம் அரசுடன் இணைந்துள்ள தற்காலிக முகவர்களின் தேவையெல்லாம், மஹிந்த அரசினையும் அவர்களது திட்டங்களையும் வெற்றிபெறச்செய்வதே தவிர முஸ்லிம் சமூகத்தின் நலன் அல்ல. எனவே இன்று அரசுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகவே வன்முறைகள் செய்வதற்கும் துணிந்துவிட்டார்கள், அப்படி இல்லையென்றால் புத்தளத்தில் உள்ள பாயிஸுக்கும் ரிஷாதுக்கும் திருகோணமலையில் என்ன வேலை வேண்டிக்கிடக்கின்றது. மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை அழைத்து வந்து கள்ள வாக்குப்பதியவைக்கும் ரிசாதின் கேவலமான செயற்பாட்டை என்னவென்று சொல்லுவது. மட்டக்களப்பில் அமீரலியின் அடாவடித்தனங்களையும் அம்பாறையில் அதாவுல்லாவின் கொட்டத்தையும் காணுகின்றபோது தமது எஜமானர்களை திருப்ப்திப்படுத்துவதில் இவர்களுக்கு உள்ள கரிசனையும் கடையர்களின் அரசியல் முறையின் அசிங்கத்தையும் எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை. ஆனால் எல்லாமே சமூகத்தின் பெயராலேயே அரங்கேறுகின்றது.

ஒட்டுமொத்தமாக கிழக்கில் முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கக்கிடைதத ஒரு அரிய சந்தர்ப்பத்தை எல்லாத்தரப்புமே பரிகொடுத்துவிட்டு இன்று முதலைமச்சருக்கும் இன்னும் இதர அமைச்சுக்களுக்கும் அடிபடும் அவலம் எம்மை சூழ்ந்துகொண்டுள்ளது. எம்மவர்களுக்கு இதுவல்ல இன்னுமின்னும் பல சந்தர்ப்பங்கள் வரினும் தமது சொந்த நலன் குறித்த நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்தும் தலைவர்கள் இருக்கும் காலமெல்லாம் எதுவும் பலன் தரப்போவதில்லை.

கிழக்கு மாகாண தேர்தல் குறித்து முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கவேண்டிய அவதானங்களும், நிலைப்பாடுகளும். 23rd March 2008

கிழக்கு மாகாண தேர்தல் குறித்து முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கவேண்டிய அவதானங்களும், நிலைப்பாடுகளும்.

தேர்தலின் உள்நோக்கம்:

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அடிப்படையான தீர்வுகள் எதுவும் எட்டப்படாத சூழலில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயக, இயல்பு வாழ்வைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அல்ல, மேற்படி தேர்தலைநோக்கி அரசு துரிதகதியில் செயற்படுகின்றது. மாற்றமாக 1963முதல் ஈழப்போராட்டம் அல்லது தமிழ் தாயகப்போராட்டத்தின் மிகவுமே அடிப்படையான கோரிக்கைகளுள் ஒன்றாக வடகிழக்கு இணைப்பு அமைந்து வருகின்றது, 2005ல் பதவிக்கு வந்த மகிந்த தலைமையிலான அரசு புலிகளைப் பலவீனப்படுத்துவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக கருதி செயற்பட்டுவருகின்றது (அதன் நியாயங்களையும் சாத்தியப்பாடுகளையும் ஆராய்வதைத் தவிர்க்கின்றேன்) அதன் ஒரு கட்டமே நடந்து முடிந்த உள்ளூராட்சித்தேர்தல்களும், நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தல்களுமாகும்.

இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சிகளில் நோர்வே ஓரங்கட்டப்பட்டதும்; இந்தியா திரைமறைவில் பங்கேற்றிருப்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது. 1987ல் இடம்பெற்ற 13வது திருத்தச்சச்சட்த்தினைத்தொடர்ந்து 1988 நவம்பர் 19ம் நாள் இந்திய அமைதிகாக்கும் படையின் உதவியுடன் நடாத்தப்பட்ட வடகிழக்கு மாகாணத்தேர்தலின் பின்னர் நடக்கவுள்ள தேர்தல் இதுவாகும், இத்தேர்தலுக்கும் இந்திய நலன்களுக்கும் அதிக தொடர்பு இருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது, P.சந்திரசேகரன் மற்றும் இராதாகிருஷ்னன் ஆகியோரது செயற்பாடுகளையும் இங்கு காணக்கூடியாதக இருப்பதும் இதன் பின்னணியிலேயாகும், அனைத்துக்கட்சிக்குழு, 13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரமே இனப்பிரச்சினைக்காணதீர்வு அமைய வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது, அதுவே இந்தியாவினதும் விருப்பம், வடகிழக்கு இணைவை இந்தியா விரும்பவில்லை, அத்துடன் புலிகளின் தற்போதய ஆயுதப்போராட்ட வளர்ச்சியும் அது தமிழகத்தில் தோற்றுவிக்கும் அலைகளும் இந்தியாவை உசார்படுத்தியுள்ளது. இதுவே இந்தியாவின் கரிசனைக்கு காரணமாகும்.

எனவே தமிழ் ஈழப்போராட்டத்தில் அதிகம் ஈடுபாடுள்ள, ஈழப்போராட்டம் குறித்த அடிப்படையான கருத்துக்களைக்கொண்டுள்ள பழைய தமிழ் அரசியல் இயக்கங்களைவிடவும் அரசியல் முதிர்ச்சியில்லாத வெளிஉலகுடன் அதிகம் தொடர்பில்லாத TMVP தற்போது அரசுக்கு கிடைத்துள்ள சிறப்பான துருப்பு எனவே எப்படியாவது மாகாணசபைத்தேர்தலை நடாத்தி TMVP யை ஆட்சியில் அமர்த்துவதுவே அரசின் திட்டம். இதனூடாக

Ø வடகிழக்கு பிரிப்பை உறுதிசெய்தல், சட்டமயமாக்குதல்

Ø புலிகளை பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்துதல்

Ø மகிந்தவின் செய்ற்பாடுகளுக்கு சர்வதேச அங்கீகாரமொன்றை பெற்றுக்கொடுத்தல்

Ø பலவீனமான தமிழ் குழுவொன்றிடம் ஆட்சியை வழங்குவதனூடாக தமக்குத்தேவையான நிக்ழ்ச்சி நிரழொன்றினை நடைமுறைப்படுத்த முடியுமாக இருத்தல்.

மேற்படி அடைவுகளுக்கான நிகழ்ச்சி நிரழ் (இந்திய, இலங்கை அரசுகள் மற்றும் TMVP, JVP, Muslim Ministers and (UPFA) Alliance Parties) ஆகியவற்றின் முழுமையான பிரசன்னத்துடன் அல்லது எதிர்ப்பில்லாதா சூழலில் அல்லது எதிர்க்க முடியாத சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

முஸ்லிம்களின் நிலை

அரசு முஸ்லிம் தரப்பை அதன் வழமையான ஆசைவார்த்தைகளுடன் தேர்தல் உடன்படிக்கையொன்றுக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது, முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்குத்தருவதற்கு பேரம்பேசவும் தாம் தயார் என்று அரசு தரப்பு தெரிவிக்கின்றது (தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்லது முதலைமைச்சாரானதன் பின்பு அவர்களை குண்டுவைத்துக்கொன்றுவிட்டு தமக்கு வேண்டியவரை முதலமைச்சாராகுவது ஒன்றும் இயலாத காரியமில்லை)

பிள்ளையான் என்னும் ஒரு பிழையான தெரிவின் பின்னால் முஸ்லிம்கள் தமது வாழ்வை அடகுவைக்க முடியாது எனவே அரசுடன் இணைதல் என்பது விவாதமின்றியே முடிவிற்கு வருகின்றது.

எதிர்கட்சியுடன் (UNP) இணைவதும் மிகவும் வேடிக்கையானது, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்ற ஒரு செயலையே UNP மேற்கொள்கின்றது, SLMC மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிரான ஒரு முக்கோண போட்டியையே UNP எதிர்பார்க்கின்றது, த.தே.கூ வுடனும் புலிகளுடனும் UNP ற்கு என்ன உடன்பாடுகள் உள்ளன என்பது வெளிப்படையாக அறியப்படாத விடயங்கள்.

இத்தகைய மோசமான சூழ்நிலை இருக்கும் நிலையில் முஸ்லிம்தரப்பு : தமிழ்ர்தரப்புக்குறித்து பூச்சிய நிலைப்பாட்டுடன் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை மட்டும் கருத்தில் கொண்டு தேர்தலில் தனித்துப்போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை நிரூபிப்பதுவும், தேர்தல் முடிவுகளின் பின்னர் தாம் எந்தத்தரப்புடன் இணைவது என்று தீர்மானிக்கும் போக்கே இங்கு மிகவும் பொறுத்தமானதாகும்

இதில் உள்ள சாதகங்கள் :

Ø முஸ்லிம்களின் வாக்குப்பலம் சிதைவதத்தடுக்க முடியும்

Ø முஸ்லிம்களின் சரியான பலத்தைக்காட்டமுடியும் (சில போது ஆட்சியமைக்கும் பெரும்பான்மை எமக்கு கிடைக்கவும் முடியும்)

Ø தேர்தல் காலத்தில் அனைத்து தரப்புகளுடனும் நல்லுறவைப்பேண முடியும்

Ø இதனால் தேர்தல் அசம்பாவிதங்களை க்குறைக்கமுடியும் எம்மைப்பகைத்துக்கொள்தல் தமக்கு கேடு என்று எதிரிக்குப்புரிய வைத்தல்