Tuesday, May 19, 2009
பிரபாகரன் மரணம்: அடுத்தது என்ன?

 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான புலிகளின் தனிநாட்டுக்கோரிக்கையின் முக்கிய மையப்புள்ளியாக விளங்கிய பிரபாகரன் 18ஆம் திகதி காலையில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், இதன்மூலம் 30 ஆண்டுகால பிரிவினை யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

 

2009 மே13ஆம் திகதி இந்திய நாடளுமன்றத்தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு நிகழ்ந்து 15ஆம் திக்தியளவில் முடிவுகள் வெளியாகத்தொடங்கின, காங்கிரஸ் கட்சியின் இருப்பு உறுதிசெய்யப்பட்டது, 16ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியினை இராணுவம் சுற்றிவளைத்தது, பிரபாகரனும் அவரது முக்கிய தளபதிகளும் இனியும் தப்பமுடியாது என்ற நிலை தோன்றியது, புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்பாளர் ஊடாகவும் எரிக் சொல்ஹெய்ம் ஊடாகவும் புலிகள் தாம் சரணடைவதாக அறிவித்தனர். இராணுவமும் அதற்கு இணங்குவதுபோல புலிகளின் முக்கிய மையப்பகுதிக்குள் கால்பதித்து புலிகளின் முக்கியஸ்தர்களை சிறைப்பிடித்தனர், இவ்வேளையில் ஜோர்தான் நாட்டில் இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸா உடனடியாக நாடு திரும்பினார், இந்திய பாதுகாப்புத்துறைச்செயலாளர் எம்.கே நாராயணனுக்கும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கேத்தபாய ராஜபக்ஸவுக்கும் இடையில் நீண்டநேர தொலைபேசி உரையாடல்கள் நிகழ்ந்தன, நிலைமையினை எவ்வாறு கையாள்வது என நீண்ட ஆலோசனைகள் நிகழ்ந்தன, சர்வதேசத்தின் முன்னால் பிரபாகரனை கைதுசெய்துவிட்டோம் என அறிவிப்பது இலங்கை இராணுவத்தின் நலன்களுக்கோ, அல்லது இந்திய நலன்களிலோ எவ்வித அடைவையும் ஏற்படுத்தாது, மாற்றமாக புலிகளின் அழிவினை தடுத்துநிறுத்தி மேலும் இப்பிரச்சினை இழுத்தடிப்பதற்கான சந்தர்ப்பமாக அது மாறிவிடும் என கணிப்பிட்டு பிரபாகரனை கொல்லுவது என முடிவு செய்யப்பட்டது.


அதன்பிரகாரம் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இராணுவ விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டது, அதனைத்தொடர்ந்து புலிகளின் மிக முக்கிய மூன்று தளபதிகளும் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குச் செல்வதாக கூறப்பட்டது, இடைவழியில் இராணுவத்தினரின் சரமாரியான துப்பாக்கிச்சூட்டுக்கு குறித்த வாகனம் உட்படுத்தப்பட்டு மூவரும் கொலைசெய்யப்பட்டனர். இதன் மூலம் சர்வதேசத்தின் தேவையற்ற தலையீட்டுக்கு இலங்கை அரசு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது மட்டுமல்லாமல் தனது நீண்டகால எதிரியை சிங்களதேசம் சுட்டுத்தீர்ர்துவிட்டது. யுத்த முனையில் பிரபாகரன் கொல்லப்பட்டார், புலிகள் இயக்கம் இத்தோடு முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

 

பிரபாகரன் கொல்லப்பட்டாரா? - இலங்கை அரசின் அறிவிப்பில் எழும் சந்தேகங்கள்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக, இலங்கை ராணுவம் இன்று அறிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியில் நம்பகத்தன்மை இல்லாதவண்ணம் சூழல் நிலவுவதாக, சர்வதேச தமிழ்ச் சமுதாயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்துவிட்டதாக, இன்று (மே 18) காலை தொடங்கியே இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, புலிகளின் அரசியல் தலைவர் நடேசன், சமாதான செயலர் தலைவர் புலித்தேவன், புலிகளின் சிறப்பு ராணுவத் தலைவர் ரமேஷ் ஆகியோரது உடல் அடையாளம் காணப்பட்டதாக, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

இடையிடையே, இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மையென இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கார ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வந்ததும், பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.

அதன்பின், எஞ்சிய புலிகளின் முக்கியத் தலைவர்களை இலங்கை ராணுவம் சுற்றி வளைக்க, பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் வாகனம் ஒன்றில் தப்பியோட முயன்றதாகவும், அப்போது பிரபாகரனை ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் இலங்கை அரசு தொலைக்காட்சி சேனலில் செய்தி வெளியிடப்பட்டது. இதை, இலங்கை ராணுவமும் உறுதி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், முப்படைகளின் தலைவர்களும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து போர் முடிவடைந்ததை அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிகழ்ச்சியையும் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.

ஆனால், இன்றைய நிகழ்வை உற்று நோக்கும்போது, புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில் உண்மைத் தன்மை இல்லை என்றும், அந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது என்றும் சர்வதேச தமிழ்ச் சமூகம் தெரிவிக்கிறது. இது, இலங்கை நிகழ்வை உற்று கவனித்து வரும் சிலரிடம் பேசியபோது தெரிய வருகிறது.

போர்ப் பகுதிகளில் நடப்பனவற்றை, இலங்கை ராணுவமோ அல்லது அரசோ தெரிவிப்பதை வைத்து மட்டுமே உலக நாடுகள் நம்ப வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, இந்தத் தகவல்களை உறுதி செய்து கொள்வதில் குழப்பம் மேலிடுகிறது.

இதற்கு முக்கியக் காரணம், சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கொழும்புவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, போர் நடக்கும் வடக்குப் பகுதிகளில் அனுமதிக்கப்படுவதில்லை. அண்மையில் கூட போர்ப் பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்ற இங்கிலாந்தின் சேனல் 4 என்ற ஊடகத்தின் நிருபர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால், போர் பகுதியில் நிகழ்ந்தவற்றை புகைப்படங்கள் அல்லது வீடியோ வாயிலாகவே ஆதாரமாக வெளியிட்டு, தாங்கள் வெளியிடும் செய்திகளை நிரூபிக்கும் பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு.

இந்தச் சூழலில், பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறும் இலங்கை அரசு, அது தொடர்பான வீடியோ அல்லது புகைப்பட ஆதாரத்தை, இதுவரை (இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணி) வெளியிடவில்லை.

இதனால், பிரபாகரன் மரணமடைந்தார் என்றச் செய்தியை பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ்ச் சமுதாயம் நம்ப மறுப்பதாகவே தெரிகிறது.

இலங்கையில் போரை நிறுத்தவில்லையெனில், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அண்மையில் முதன்முதலாக, நேரடியாகவே இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல், போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு சர்வதேச சமுதாயம் கடுமையாக எச்சரிக்கை கொடுத்து வந்தது. இதனால், அந்நாட்டு அரசு நெருக்கடிக்கு உள்ளானதாகவே தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், பிரபாகரன் உள்பட புலிகள் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிடுவதால், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தைத் திசை திருப்ப முடியும் என்பதாலேயே இப்படிச் செய்ததாக, ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், பிரபாகரன் தப்பிச் செல்ல முற்பட்ட போது, அவரைச் சுட்டுக் கொன்றதாக செய்தி வெளியிடும் இலங்கை ராணுவம், அப்படி மிக நெருக்கத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் பிரபாகரனின் உடலை இதுவரை அடையாளம் காணவில்லை என்பது அவர்களது வாதம்.

இந்த சந்தேகம் மேலும் வலு சேர்க்கும் வகையிலேயே, இதுவரை 18 முக்கிய புலிகளின் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பட்டியல் ஒன்று, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொட்டு அம்மான், நடேசன், சார்லஸ் ஆன்டணி உள்பட 18 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளவே தவிர, பிரபாகரனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக, பிரபாகரனின் உடலை அடையாளம் காணும் பணியில் ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளதாக, அந்தப் பட்டியலின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போர்க் களத்தில் இறந்து கிடைக்கும் பலரது உடல்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என ராணுவம் கூறிவருவதாகவும் சிலர் புகார்களை எழுப்புகின்றனர்.

போர்ப் பகுதிகளில் சென்று செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாததால், சர்வதேச ஊடகங்கள் அனைத்துமே, இலங்கை அரசு தரப்பு சொல்லும் தகவல்களை மட்டும்தான் மேற்கோள் செய்தி வெளியிட வேண்டிய நிர்பந்தம் உள்ளதால், அந்தச் செய்திகளில் நம்பகத்தன்மை குறைவு என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையிலேயே, இலங்கை அரசின் இன்றைய அறிவிப்புகளும், குறிப்பாக பிரபாகரன் மரணம் குறித்த தகவல் சந்தேகத்தை எழுப்புகின்றது என்பது தமிழ்ச் சமூகம் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

வீடியோ அல்லது புகைப்பட ஆதாரங்களை வெளியிட வேண்டிய இலங்கை அரசு, அப்படி எதையும் இதுவரைச் செய்யாதிருப்பதும் ஊடகங்கள் மத்தியிலேயே கேள்வி எழுப்பச் செய்கிறது.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான போரை நிறுத்துவதற்காக, உலக நாடுகள் முழுவதுமுள்ள தமிழர்கள் அண்மைக்காலமாக தங்களால் இயன்றவரை முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு நாடுகளில் அவர்கள் போராட்டங்களும், உண்ணாவிரதமும் நடத்தினர்.

தமிழினத்தைக் காப்பதற்காக, இவ்வாறு அல்லும் பகலுமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்த தமிழ் மக்கள், இலங்கை அரசு தரப்பில் இருந்து வெளியிடும் செய்திகளைக் கண்டு, ஒரு புறம் அதிர்ச்சியும் துயரமும் அடைந்து வந்தாலும், அந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை மீது தொடர்ந்து வினா எழுப்பி வருகின்றனர்.

 

பிரபாகரன் மரணம்...  உடல் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு

கொழும்பு, மே 19:

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை போர்ப் பகுதியில் இருந்து மீட்டதாக, இலங்கை ராணுவம் இன்று (மே 19) அறிவித்தது. அதற்கான ஆதாரம் என்று கூறி, சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை கைப்பற்றிவிட்டோம் என இலங்கை ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா தெரிவித்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், நந்திக்கடலின் கரையோரத்தில் பிரபாகரனின் உடல் கிடந்ததாகவும், அவரது உடலில் குண்டுகள் துளைத்த அடையாளங்கள் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் செய்தி மற்றும் ஆதாராமாகக் கூறப்படும் வீடியோ, புகைப்படங்கள் ஆகியவைக் கூட நம்ப இயலாதவண்ணம் இருப்பதாக, புலிகள் ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கை ராணுவம் கூறிவரும் தகவல்களில் எவ்வித நம்பகத்தன்மையும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், படுகொலையை மறைப்பதற்கான முயற்சிகளில்தான் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதனால், பிரபாகரனின் மரணம் குறித்த சர்ச்சையும் குழப்பமும் நீடித்து வருகிறது.

முன்னதாக, தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணத்தை, இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதிபடுத்தவில்லை. மேலும், விடுதலைப்புலிகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பை மறுத்துள்ளனர்.

இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை முழுமையாக வீழ்த்திவிட்டதாகவும், இலங்கை அரசு நேற்று (மே 18) அறிவித்தது.

மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் முக்கியத் தலைவர்களான பிரபாகரனின் மகன் சார்லஸ்,புலிகளின் அரசியல் தலைவர் நடேசன், சமாதான செயலர் தலைவர் புலித்தேவன், புலிகளின் சிறப்பு ராணுவத் தலைவர் ரமேஷ் உள்பட 18 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாக, இலங்கை ராணுவம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் செல்ல முற்பட்டபோது, அவரை ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், அவரது உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர்முப்படைகளின் தலைவர்களும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ராஜபக்சே உரை...

இந்த நிலையில், போர் முடிவடைந்தது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்காக இன்று காலை 9.30 மணியளவில் உரை நிகழ்த்தினார்.

தமிழில் உரையைத் தொடங்கிய அவர், "இந்தப் போர் விடுதலைப்புலிகளுக்கு எதிரானது மட்டுமே; தமிழர்களுக்கு எதிரானது அல்ல. இந்த தேசத்தில் ஜாதி, மதி, இன, மொழி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும். அதற்காகவே இலங்கை அரசு பாடுபடுகிறது.

தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக நானும், எனது அரசாங்கமும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். தமிழர்கள் எவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது. சர்வதேச நெருக்கடி மிகுதியானல், தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழிவகை செய்யாது," என்றார்.

பிரபாகரன் மரணத்தை உறுதிபடுத்தவில்லை!

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், புலிகள் அழிக்கப்பட்டனர் என்றும் உறுதியாக தெரிவித்த ராஜபக்சே, புலிகள் தலைவர் கொல்லப்பட்டாதாக வெளியிட்ட தகவலை தனது உரையில் உறுதிபடுத்தவில்லை. ஒரு இடத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடவில்லை.

எனவே, இலங்கை ராணுவத்தின் நேற்றைய அறிவிப்பு குறித்த சந்தேகம் முழுமையாக நீடித்தது.

மேலும், ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த நிகழ்வை, சர்வதே சமுதாயத்திடம் இருந்து திசை திருப்பவே, இலங்கை ராணுவம் நேற்று உண்மைக்குப் புறம்பாக அறிவித்திருக்கலாம் என்று நடுநிலையாளர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

பிரபாகரன் மரணத்தை மறுத்தது விடுதலைப்புலிகள்!

பிரபாகரன் மரணமடைந்ததாகஇலங்கை அரசு வெளியிட்ட தகவலை விடுதலைப்புலிகள் தரப்பும் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், புலிகள் ஆதரவு இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், " இலங்கை அரசு நிரூபிக்க முடியாத ஓர் உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

இலங்கை ராணுவம் தமக்கு ஒரு ராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால், அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்," என்றார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் எதிர்காலத் திட்டம் குறித்து அவர் கூறுகையில், "இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்னையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்னைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது," என்றார் செல்வராஜா பத்மநாதன்.