Friday, January 30, 2009

இனத்துவப் போராட்டத்தின் புதிய பரிணாம மாற்றம் -அ.அஸ்மின்

மாவிலாறில் தொடங்கி, முல்லைத்தீவின் இதயம்வரை போய்விட்ட மகிந்த தலைமையிலான இலங்கை அரசின் புலி ஒழிப்புப்போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அரச தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் கருத்து வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது, வடக்கு கிழக்கில் மிகவிரைவில் அமைதி திரும்பும் என்பது அவர்களது கணிப்பு.

வரலாற்றை கூர்ந்து கவனிக்கும் எவரும் இலங்கையின் இனப்போராட்டம் இன்றைக்கு 600 வருடங்களுக்கு முன்னமே தொடங்கிவிட்டதொன்று என்பதையும் அதன் பல்வேறு பரிணாமங்களையும் கண்டுகொள்வர், அது இன்றுவரை தீர்வின்றி தொடர்வதும், ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு அணி இன்னுமொரு அணியினை மிகைப்பது பின்னர் தோல்விகண்ட அணி வெற்றிபெருவதும் மாறிமாறி நிகழ்கின்ற ஒன்றாகவும், அது யுத்தம், அரசியல்போராட்டம் என்றும் பல்வேறு வடிவங்களை கண்டிருப்பதையும் கண்டுகொள்வார்கள். எனவே இப்போதைய இராணுவ வெற்றிகள் நிலைக்கவேண்டுமாக இருப்பின் அரசியல் ரீதியாக இது தீர்க்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை, அந்தவகையில் 1977ற்குப்பின்னதான இனத்துவப் போராட்டத்தின் ஆயுதவடிவமானது விடுதலைப்புலிகள் என்ற மிகவும் சக்திவாய்ந்த போராட்ட இயக்கம் ஒன்றின் தலைமையில் இன்றுவரை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

 

அப்போராட்ட இயக்கம் இராஜதந்திர ரீதீயில் இனபோராட்டத்திற்கு தீர்வாக தனிநாட்டுக்கோரிக்கையினை முன்மொழிந்து அதனை சர்வதேச அங்கீகாரத்துடன் யதார்த்தப்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாகவே 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தையை நோக்கி நகர்ந்தது, ஆனால் ஆயுதபோராட்டத்தில் இருந்த முதிர்ச்சியும் அனுபவமும், அதன் அரசியல் முன்னெடுப்புகளில் இல்லாமல் பேனதும் அதன் தலைமைத்துவம் ஜனநாயக மரபுகளைவிட்டும் வெளியே இருந்து செயற்பட்டதும் இன்று அதன் படுதோல்விக்கு காரணமாகிப்போய்விட்டது, எந்தப்போராட்டமும் அதன் எழுச்சிக்காலம் வீழ்ச்சிக்காலம் என்ற இரண்டு கட்டங்களை அவசியம் தாண்டியேயாக வேண்டும், ஆனால் இவை இரண்டு கட்டத்திலும் நிதானம் இழக்காமல் மிகவும் உறுதியுடனும் அவ்வியக்கத்தால் செயற்பட முடிந்தால் மட்டுமே அது வரலாற்றில் நிலைக்கும் என்ற நியதிக்கு புலிகளும் உட்பட்டேயாக வேண்டும். அவர்கள் வரலாற்றில் நிலைப்பார்களா இல்லையா என்பது இங்கு விவாதப்பொருள் அல்ல, மாற்றமாக இனபோராட்டத்தின் இன்றைய ஆயுதரீதியான பரிணாமம் மாற்றியமைக்கப்படுகின்றது, என்பதும் அது இன்னுமொரு புதிய வடிவத்தை எடுக்கப்போகின்றது, என்ற உண்மையினைக்கண்டு கொள்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.

 

இலங்கைதீவு அதன் பூகோள அமைப்பில் ஒற்றை நிலப்பரப்பாக இருப்பதைப்போன்று அதன் குடிசார் அமைப்பில் ஒன்றுபட்டதல்ல, பிரித்தாளும் பிரித்தானியாவின் தந்திரோபாயத்திற்கு முன்னமே எமது தேசத்தில் பிரிவினைவாதம் தளைத்துவிட்டது. அது தமிழர் சிங்களவர் என்பதற்கு அப்பால், வடக்கத்தான் கிழக்கத்தான் என்றும், கரைநாட்டுக்காரன் மலைநாட்டுக் காரன் என்றும் வகுபட்டுவிட்டது, அதுமட்டுமல்லாமல் மொழி, மதம், பிரதேசம், குடும்பம், குலம் என நிறையவே பாகுபாடுகள் நிறைந்த ஒரு தேசமாகவே திகழ்கின்றது. எனவே பிரிவினை பேசுவதும் அதன்பால் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை திரட்டுவதும் எமது தேசத்தில் கடினமான காரியம் அல்ல,  இதில் காலாகாலம் தோன்றிய அரசியல் இயக்கங்களும் அவர்களது கோசங்களும் அவர்கள் பெற்ற அரசியல் அடைவுகளும் சாடிசியாகும் எனவே குறிப்பிட்ட இலக்கை அடைய முனையும் எவரும் தமது சக்தியாக இத்தகைய பிரிவினைவாத கோசங்களையே நம்பியிருக்கவேண்டிய தேவை இருந்தது.

 

இப்பின்னணியில் 1983ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரம்; புலிகள் பேன்ற ஆயுதக்குழுவினருக்கு ஒரு வரப்பிரசாதமாகிப்போகவே அவர்கள் ஒரு ஆயுதப்போராட்ட இயக்கமாக தம்மை வடிவமைத்து, தேசிய சர்வதேசிய அளவில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு  அமைப்பாக அவர்களை வளர்த்துவிட்டது, ஆனால் 2002ல் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர், புலிகளின் முக்கியஸ்தர்களுக்கும் அரச தரப்பு மற்றும் மேற்கு நாட்டு சமாதான மத்தியஸ்த்தர்களுக்கும் இடையில் நிகழ்ந்த பலசுற்றுப்பேச்சுவார்த்தைகள், யுத்தமில்லாத அமைதி சூழல் என்பன, புலிகளின் ஈழப்போராட்டத்தின் மீது வீழ்ந்த போரிடியாகவே கொள்ளப்படவேண்டும், சிங்கள இராணுவத்திற்கெதிராக திரட்டப்பட மனவலிமை, மக்களிடம் இருந்த இனவெறி கொஞ்சம் கொஞமாக தளர்ச்சிகாணத் தொடங்கியது,

 

மறுபுரத்தில் ஐ.தே.கவின் தலைவர் ரணில் ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கை தமிழர்களுக்கு தனிநாட்டை வழங்கியதற்கு ஒப்பானது என்ற அமைப்பில் தென்னிலங்கை எங்கும் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத அரசியல் பிரச்சாரத்தின் விளைவாக தென்னிலங்கையின் இனத்துவ உணர்வுகள் முறுக்கேறியிருந்தன. இதுவே மகிந்த இனவாதிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கவும், அதனடிப்படையில் இன்று புலியெதிர்ப்பு யுத்தம் ஒன்றை நிகழ்த்தவும் அவருக்கு வழிசமைத்திருக்கின்றது.  அத்தோடு மேலைத்தேய நாடுகளின் தலையீடுகள் தனிக்கப்பட்டு இந்தியாவின் முழுமையான துணையுடனும் ஆசீர்வாதத்துடனும் இன்று முல்லைத்தீவுவரை சென்று புலிகளை ஒழிக்கும் யுத்தம் வெற்றிகண்டு கொண்டிருக்கின்றது.

 

விடுதலை இயக்கம் என்று தம்மை புலிகள் கூறிக்கொண்டபோதிலும் அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளும், நீதி, மனிதம், ஜனநாயகம் என்பவற்றுக்கெதிரான செயற்பாடுகள் அவர்கள் சர்வதேச அரங்கில் தடைசெய்யப்படுவதற்கும், தயக்கமின்றி நேரடியாக எந்த தேசமும் உதவ முன்வரதா அமைப்பாக அவர்களை மாற்றி விட்டிருக்கின்றது. ஒரு இனத்தின் உரிமைக்காகப்போராடும் இயக்கம் இன்னுமொரு இனத்தின் மீது தனது மிலேச்சத்தனங்களை கட்டவிழ்த்து விடுவது எப்படி நியாயமாகும், 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்தும் வடக்கிலிருந்தும் முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர், ஆனால் அவர்கள் நினைத்ததுபோல அவர்களால் யாழ்ப்பாணத்தை இன்றுவரை பூரணகட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமலே போயிற்று, அதேபேன்று 2006ல் திருகோணமலையில் மூதூர் என்னும் முஸ்லிம் கிராமத்தில் புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனம் இன்று அவர்களை திருகோணமலையை விட்டும் வெளியில் துரத்தியுள்ளது. தனது இனத்தில் மாற்றுக்கருத்துள்ள ஏராளமானேரை கொன்றொழித்தது அவர்கள் மேற்கொண்ட இரண்டாவது அநாகரீகமான செயற்பாடாகும், இன்றுவரை அவர்களால் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், வாலிபர்கள், யுவதிகளின் எண்ணிக்கை சிங்கள இராணுவதால் பலியெடுக்கப்பட்ட எண்ணிக்கையினைவிடவும் அதிகமாகும் என்ற உண்மை மறைக்கப்படமுடியாது. இவ்வாறாக ஒரு விடுதலை இயக்கம் அதிகூடிய பயங்கரவாத செயற்ப்பாடுகளுடன் தொடர்புடையதாய் இருக்கும் நிலையில் அதன் இருப்பு நிலைத்திருக்கக்கூடியதல்ல, அது ஒரு முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும். அந்தவகையில் மகிந்த இன்று மெற்கொள்ளும் புலியொழிப்பு போராட்டத்திற்கு முழு உலகின் ஆதரவும் உண்டு.

 

ஆனால் யுத்தத்தின் இடையில் அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமையே மிகவும் கவலையளிக்கின்ற விடயமாகும். புலிகள் பலவந்தமாகவே மக்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் முடக்கியுள்ளனர் என்று பரவலாகப்பேசப்படுகின்றது. அத்துடன் மேற்படி யுத்த நடவடிக்கையுடன் உடன்படாத பல புலிகளின் முக்கிய உருப்பினர்கள் அவ்வமைப்பினால் கைதுசெய்யப்பட்டும் கொலைசெய்யப்பட்டும் உள்ளார்கள் என்றும் இன்னும் சில மேல்மட்ட உருப்பினர்கள் கருணாவுடனும், இலங்கை இராணுவத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்தி முக்கிய தகவல்களை வழங்குவதாகும் அவர்களுள் ஒருசிலர் புலிகளால் கைதுசெய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் நம்பகமான செய்திகள் வருகின்றன இந்தவகையில் நோக்கும் பொழுது புலிகள் தமது இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூற முடியுமாக உள்ளது, அதேவேளை அவர்களின் கரங்களில் அமைதியை நேசிக்கும் பொதுமக்கள் அகப்பட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மையே.

 

 முழு உலக அளவிலும் புலிகள் தமது செயற்திறனைக்கொண்டு மேற்கொள்ளும் அழுத்தங்கள் அனைத்தும் புஸ்வானமாகும் நிலையே இருக்கின்றது, அயல்நாட்டில் தமிழ்த்தேசம் பொங்கியெழுகின்ற போதிலும் அது மத்திய அரசால் கணக்கில் கொள்ளப்படுவதாக இல்லை, தீக்குழிப்புகள், உண்ணாவிரதங்கள் என எல்லாம் இடம்பெறுகின்றபோதிலும் எதுவும் பயன் தருவதாக இல்லை. இது இவ்வாறு இருக்க அரசதரப்பின் கை மிகவும் உயர்ந்திருப்பதும் அது எக்காரணம்கொண்டும் எங்கும் ஒரு தளர்வைக்காட்டுவதாகவும் இல்லை. எனவே இத்தகைய ஒரு நிலைக்கான காரணி அல்லது பின்னணியாக செயற்பாடு எதுவாக இருக்கும். இதுவே இன்று எம் எல்லோருக்கும் முன்னால் உள்ள வினாவாகும்.

 

இலங்கையின் இனபோராட்டம் அதனது ஆயுதரீதியான பரிணாமத்தில் இருந்து இன்னுமொரு பரிணாமத்தை நோக்கி திரும்பும் திருப்பத்தில் இருக்கின்றது என்பதுவே இங்குள்ள பின்னணியாகும், அது பின்வரும் இரண்டு வடிவங்களை எடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஒன்று இனத்துவ எண்ணக்கரு, யுத்தம் என்பவற்றில் கொண்ட அதிருப்தி நம்பிக்கையீனம் என்பவற்றால் ஒரு சாதாரண வாழ்வொழுங்கை ஏற்படுத்திக்கொள்தல்  என இரண்டு இனத்துவங்களும் தீர்மானித்தல், இரண்டாவது புலிகள் தவிர்ந்த மாற்று தமிழ் அமைப்புகளின் பிரசன்னத்துடன் இராஜதந்திர ரீதியிலான போராட்ட ஒழுங்கொன்றில் நுழைவது, இங்குதான் இந்தியாவின் தலையீடு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளும், புலிகள் மேற்கொள்ளும் அமுத்தங்களும் பலப்பிரயோகங்களும், இந்தியாவைப்பொறுத்தவரையில் இலகுவாக நோக்கப்படும் விடயங்கள் அல்ல, அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிலும், தேசிய நலனிலும் பாதிப்பை செலுத்தும் அம்சங்களாகவே நோக்கப்படுகின்றது, எனவே அவசரமாக யுத்தத்தினை நிறைவு செய்து ஒரு இயல்பு நிலையினை ஏற்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் விஜயத்தைத்தொடர்ந்து மகிந்த அறிவித்த 48 மணித்தியால காலஅவகாசம் என்பன இந்தியாவின் மறைகரத்தை தெளிவாக காட்டுகின்றன

 

Indian Forces (IPKF- 1987- Jaffna - Palali)


இந்திய உளவு விமானங்கள், ராடர்கருவிகள், இராணுவ நிபுனத்துவ உதவிகள் என்பன இலங்கை இராணுவத்தின் வெற்றிகளுக்கு பலம்சேர்க்கின்றன, 1987 இன் பின்னர் இந்தியா எப்போதும் மறைமுகமாகவே இலங்கை விடயத்தில் செயற்படும் என்ற நிலைமை இன்னும் தொடர்கின்றது, தமிழ்நாட்டின் அறிக்கை மற்றும் ஆவேச அரசியலை சமாளிக்கும் ஆற்றல் காங்கிரஸுக்கு நிரையவே இருக்கின்றது, எனவே இந்தியாவின் ஆசீர்வாதம் யுத்ததில் புலிகளை தோற்கடித்து அவர்களை உலக அரங்கிலிருந்து முற்றாக அழிப்பதற்கும். புலிகளால் தமிழகத்தில் எழும் அச்சாதாரண நிலைகளுக்கு முற்றுப்புள்ளிவைப்பதுமேயாகும்.
 ஆனால் இந்தியாவின் மேற்படி ஆசீர்வாதம் யுத்தப்பிரதேசத்தில் நிகழும் கடத்தல்கள், மனிதப்படுகொலைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் போன்ற மனிதம் தொலைக்கும், இனத்துவ வெறியினை மேலெலச்செய்யும் நிகழ்வுகளுக்கு துணைபோகுமாக இருந்தால்  இந்திய இராணுவம் 1987ல் நேரடியாக இலங்கையில் இருந்தபோது ஏற்படுத்திய நிலைகளுக்கும் இப்போதைய நிலைகளுக்கும் மாற்றமில்லாமல் போய்விடும். எனவே இந்தியாவின் இலக்காகவுள்ள புலி ஒழிப்பு நடவடிக்கைக்கும், மென்மையான அரசியல் அமைப்பு, அல்லது மாற்றுக்குழுக்களின் கைகளில் இலங்கையின் இனப்பிரச்சினையினை க்கையளித்தல் என்ற நோக்கமானது விரைவில் அமுல்படுத்தப்படவேண்டும் என்பதில் இந்தியா அதீத அக்கறையுடன் இருக்கின்றது. எனவே இனப்போராட்டத்தின் புதிய பரிணாமத்தை விரைவாக ஏற்படுத்தவேண்டும் என்பதுவே இந்தியாவின் விருப்பமாகும்.

 

இப்போது ஏற்படப்போகும் இனத்துவப் போராட்டத்தின் பரிணாம மாற்றமானது 1956ல் பண்டா- செல்வா ஒப்பந்தத்தைத்தொடர்ந்து நிகழ்ந்த பரிணாம மாற்றத்தின் மறுதலையாக அமைந்துவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கின்றத, அன்று பண்டாரநாயக்கா இனவாதிகளுடன் கூட்டுசேர்ந்து கொண்டு தனது குடும்ப அரசியலை ஸ்தாபிதம் செய்தபோது ஆயுதப்போராட்டமே தீர்வு என்ற எண்ணக்கரு வேர்விட்டது, இன்று 50 வருடங்களின் பின்னர் மஹிந்த மேற்கொள்ளும் இனவாதிகளுடனான கூட்டும், நிறுவ முயலும் குடும்ப அரசியலும், யுத்தத்தின் மீது உள்ள உலகளாவிய வெறுப்பும் இராஜதந்திர ரீதியில் இனபோரிற்கான தீர்வு நோக்கி இனத்துவப்போராட்டத்தின் பரிணாமத்தை மாற்றி யமைக்கும் வாய்ப்பும் உள்லது,இன்னுமொரு புரத்தில் அது ஒரு விகாரமான ஆயுதப்போராட்டத்தினுள் தள்ளிவிடாமல் இருக்கவேண்டும் என்பது எல்லோரதும் பிரார்த்தனனயாகும்.



No comments: