Monday, March 23, 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மகிந்த திடீர் அழைப்பு

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மகிந்த திடீர் அழைப்பு: நோக்கம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் ஐயம்

தற்போதைய நிலைமைகள் குறித்து பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். எந்த விதவிதமான முன் அறிவிப்பு எதுவும் இன்றி கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புக் கடிதங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் வியாழக்கிழமை (26.03.09) மாலை 6:30 நிமிடத்தில் சந்திப்பு நடைபெறும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 
 
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பு குறித்து எதிர்வரும் 25 ஆம் நாள் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராயும் என்றும் அதன் பின்னரே சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.
 
இதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபலமான ஆங்கில பத்திரிகையான 'த ரைம்ஸ்' இதழுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் நிபந்தனையின்றி பேசுவதற்கு தயார் என அறிவித்துள்ளதை பிரித்தானியா வரவேற்றுள்ளதுடன் உடனடியாக பேச்சுக்கு செல்ல வேண்டும் என சிறிலங்கா அரசுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.
 
இதனைச் சமாளிப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். 
 
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் அவர்களுடன் இனிமேல் பேச வேண்டிய தேவைகள் எதுவும் இல்லை எனவும் மகிந்த அரசாங்கம் கூறியிருந்தது. அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற நகரங்களை கைப்பற்றிய பின்னர் தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைகளை கேலி பண்ணும் வகையிலும் மூத்த அமைச்சர்கள் கருத்துக்களை கூறியிருந்தனர்.
 
இந்த நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூடடமைப்பு நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசியல் அவதானிகள் வலியுறுத்துகின்றனர்.  
 
இதேவேளையில் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதல்களை படையினருக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றனர். 
 
போரில் ஏற்பட்டுள்ள இந்த தற்போதைய நெருக்கடி நிலைமைகளை சமாளிப்பதற்காகவும் இந்த சந்திப்பை மகிந்த அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கலாம் என கொழும்பில் அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
அதே சமயம், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போருக்காக 1.6 பில்லியன்களை செலவு செய்து விட்டு, மேலும் 1.9 பில்லியன்களை அனைத்துலக நாணய நிதியத்திடம் மகிந்த அரசாங்கம் கடன் கோரியுள்ளது. 
 
ஆனால், அவ்வளவு தொகையை வழங்குவதா இல்லையா என்பது குறித்து அனைத்துலக நாணய நிதியம் தற்போது ஆராய்ந்து வருகின்றது. இதன் பின்னணியிலும் கூட்டமைப்புக்கான அழைப்பு தொடர்பில் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் தமிழர் விவகாரத்தை போசுவதற்கு இணக்கம் தெரிவித்து ஏனைய நாடுகளின் ஆதரவுகளையும் கோரி வருகின்றனர்.
 
அனைத்துலக நாடுகளின் இவ்வாறான வேகத்தை தடுப்பதற்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான ஒரு நாடகத்தை மகிந்த அரசாங்கம் தற்போதைக்கு ஒழுங்கு செய்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
"குறிப்பாக - இனப் பிரச்சினை தீர்வு முயற்சிகளை மேற்கொள்வதற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருபோதும் அழைப்பு விடுக்கப்பட்டதில்லை என்ற விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
 
அத்துடன், கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல என்றும் மகிந்த அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையிலேயே தமிழ் மக்களுக்கு எதிரான போர் தீவிரமாக முடக்கி விடப்பட்டது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
மேலும் வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல், காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்களும், படையினரின் எறிகனை, பீரங்கி தாக்குதல்கள், மற்றும் வான் தாக்குதல்கள் மூலமான இன அழிப்பு நடவடிக்கைகளும் தீவிரமமைடந்து வரும் நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட காரணம் என்ன என்ற கேள்வியையும் அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.
 
அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு 107 தடவைகள் கூடியும் இன்னமும் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா படைகளுக்கு வெற்றி என்ற மாயையில் அந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு தயாரித்த அரை குறை தீர்வுத் திட்டத்தையும் மகிந்த அரசாங்கம் கைவிட்டிருந்தது என்பதையும் அரசியல் ஆய்வாளர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர்.
 
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு மகிந்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதை சமாதான பேச்சுக்கான ஒரு ஆரம்பமாகவோ அல்லது போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களைச்  செய்வதற்கான ஒரு முயற்சியாகவோ கருத முடியாது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, நிதானமாகவும் காலத்தின் பொறுப்பு உணர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

[PUTHINAM திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 07:38 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

http://puthinam.com/full.php?2b44OO44b3aW6DR24d31VoK3a03I4AKe4d2YSmAce0de0MtHce0df1eo2cc0UcYI3e

 

 

No comments: