Sunday, July 27, 2008

இலங்கையிலோ முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஓர் ஊடகமும் இல்லாமை

கொலைகள், பசிப்பிணி மற்றும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் பலஸ்தீனர்களிடையே 67க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால், இலங்கையிலோ முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஓர் ஊடகமும் இல்லாமை வேதனையை அளிக்கின்றது என ஓமான் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியரும், சர்வதேச ஊடக பயிற்றுவிப்பாளருமான கலாநிதி அஹ்மட் லபிப் ஜபார் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மீள்பார்வையின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அஹ்மட் லபிப் ஜபார் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:

இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. அவை ஒன்றுமே வெளியுலகிற்கு வருவதில்லை. வெளிநாட்டு ஊடகங்களிலும் இவை வெளிவருவதில்லை. இதனால் இலங்கை முஸ்லிம்களுக்கு இவ்வாறான பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது என்பது தெரிய வருவதில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருப்பதும் அவர்களுக்கு என தனியான ஒரு ஊடகம் இல்லாதிருப்பதையும் அறிந்து கொண்டேன். இதற்காக வேண்டி நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. இதற்கும் தீர்வு உண்டு. அதற்காக நாம் இன்றிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். முன்னைய காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைதான் புதிய செய்திகள் வெளிவரும். ஆனால் இன்று அவ்வாறில்லை. மூன்று மணித்தியாலயத்திற்கு ஒரு தடைவ புதிய செய்திகள் வருகின்றன. எனவே, பழைய யதார்த்தத்திலிருந்து நாம் மாறுபட வேண்டும்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாம் இரண்டாக எடுத்துக் கொள்ளலாம் ஒன்று பாதுகாப்பு மற்றையது மூலவளப் பற்றாக்குறை. பாதுகாப்பு ரீதியானதை எடுத்துக் கொண்டால் அதாவது முஸ்லிம் அல்லாதவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அப்போது அந்தப் பிரச்சினையில் இருந்து அதை நாம் குறைத்துக் கொள்ளலாம். சத்தியத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

அடுத்து மூலவளப் பிரச்சினை. இதன் மூலம் பல விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இதில் முக்கியமாக உள்ளது ஊடகப் பிரச்சினை. இது தீர்க்கப்படுமானால் முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும். இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை இரு பகுதிகளில் வெளிக்கொணரப்பட வேண்டும். ஒன்று உள்நாட்டு, மற்றையது வெளிநாட்டுக்கும் தெரியப்படுத்துதல்.

உள்நாட்டு ஊடகங்களிலும் எமது பிரச்சினையை உரிய முறையில் வெளியிட்டு அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

No comments: