Friday, January 25, 2008

தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதங்களை அங்கீகரிக்கின்றீர்களா?

http://thesamnet.co.uk/?p=327

அவநம்பிக்கை கசப்புணர்வு இயலாமை தெளிவின்மை போன்ற உணர்வுகளின் ஆதிக்கத்தில் எழும் கருத்தாடல்கள் பெரிதும் மலினப்படுத்தி எம்மை நாமே கேவலப்படுத்துவதில் கொண்டுபோய் நிற்கின்றது.

மலினப்படுத்துவதை குறைத்தல் எம்மை நாமே கேவலப்படுத்தவதை நிறுத்தல் என்பதை பிரதான இலக்காக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான கருத்தாடலை முன்னெடுக்க உதவுதல் என்பதை தொலை நோக்காகக்கொண்டு ஒரு திசைப் பயணத்துக்கான முதல் அடியை நம்பிக்கையுடன் வைக்கிறேன்.

ஒரே இரவில் நாம் எல்லாவற்றையும் மறந்து ‘நாளை நமதே’ என்று ஒன்றிணைந்து கட்டிப் பிடித்து ஆடிப்பாட முடியும் என நான் கருதவில்லை. இன்றைய நிலையில் அப்படி தமிழரை ஒன்றிணைக்கும் ஒரு பாடல் அல்லது ஒரு கோசம் அல்லது ஒரு கொள்கை இல்லை. எல்லாம் மலினப் படுத்தப்பட்டுவிட்டன.

இணையத்தில் கருத்தாடுகின்ற அவதானிக்கின்ற அனைத்து தரப்பினருக்கும் சில அடிப்படையான வினாக்களை இங்கு முன்வைக்கிறேன். அவற்றுக்கான எனது மனப் பதிவுகளையும் தந்துள்ளேன். இணையத்தில் உரையாடும் அனைவரும் தமது தனிப்பட்ட கண்ணோட்டங்களை முன்வைக்க வேண்டும் என்பதே எனது பணிவான கோரிக்கை. - யாதவன்

(இப்பதிவில் புதிய கேள்விகள் இணைக்கப்படும். தயவு செய்து கேள்விகள், அது தொடர்பாக கருத்தாளர்கள் பதிவு செய்துள்ள கருத்துக்கள் தொடர்பாக மட்டும் கருத்துக்களைப் பதிவு செய்து ஒத்துழைப்பு வழங்கவும். தேசம்நெற்)

என்ற பதிவிற்கு எமது பதில்........


என்னைப்பொறுத்தவரையில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் தேசியவாதம் என்பவற்றின் தேவை என்ன? என்பதும் அதன் நடைமுறைவடிவம் என்ன? என்பதுமே மிகுந்த கவனத்தை ஈர்க்கின்ற அம்சங்களாகும். சமகால உலக ஒழுங்கை நோக்கும் போது குறுந்தேசியவாதம்,பிரதேச வாதம், பெருந்த்தேசியவாதம் என்பன வலுவிழந்து மனிதன் பூகோளக்கிராமம் என்ற எண்ணக்கருவை நோக்கிச்செல்வதைக்காண முடிகின்றது, பல்வேறு நாடுகள் தம்மை ஏதாவது ஒரு கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்வதிலும், தமது பலத்தையும் பாதுகாப்பையும் உறிதிசெய்வதிலும் அதிக கவனத்துடன் செயற்படுவதைக்காண முடிகின்றது.

இந்நிலையில் எமது இனத்துவம் சார்ந்த தேசியவாதம் ஏன்? எதற்காக என்ற வினா எம்முன் எழுகின்றது. "மனிதன் வாழ்தல் அவசியம்" எனவே வாழ்வது அடிமையாக வாழமுடியாது தான் சுதந்திரமாக வாழ்வேண்டும், தனது தேவைகள் நிரைவு செய்யப்படுதல் வேண்டும், தனது மொழி நாகரீகம் கலாசரம், பண்பாடு என்பன பாதுகாக்கப்பட்டு கௌரவமான வாழ்வு தேவை என்பதுதான் எமது எதிர்பார்ர்ப்பு, இதனை அடைந்து கொள்வதற்காகத்தான் நாம் தேசியவாதத்தை முன்னிறுத்துகின்றேம், இதுதான் இன்று தேசியவாதம் குறித்த கருத்தாளர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இக்கருத்தில் உடன்படுகின்ற எந்த தேசியவாத சிந்தனையாளனும் அல்லது செயற்பாட்டளனும் தனக்குள்ள அதே தேவைகள் மற்ற மனிதருக்கும் உண்டு என்பதில் மறைக்கருத்துடன் இருக்க வாய்ப்பில்லை. அப்படியாயின் சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியவாத சிந்தனை பரஸ்பரம் அங்கீகரிக்கப்படவேண்டிய ஒன்றே.ஆனால் இதன் நடைமுறைவடிவம் முற்றிலும் மாறுபட்ட, முரண்பாடுகளின் தொடராகவே உள்ளது,

பூகோளரீதியான இருப்பு: இங்கு முதன்மையாக எடுத்தாளப்படுவது பூகோளரீதியான இருப்பும் எல்லைப்பகிர்வுமாகும். இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில் அதில் நேரடியாக பங்கேற்ற அரசுதரப்பு தமிழரின் பூகோள இருப்பினை கேள்விக்குள்ளாக்கினர், இடையூறுசெய்தனர், இனப்படுகொலைகள் செய்தனர், யுத்தம் பொருளாதாரத்தடை விதித்தனர் என்பது வரலாற்று உண்மை, ஆனாலும் அரசு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அப்படி செய்திருந்தால் இன்று கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ் அடையாளம் இருந்திருக்காது, ஆனால் விடுதலைப்புலிகள் 1990ல் வடக்கில் அத்தகையதொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர், அதுமட்டுமன்றி அதுவே அவர்கள் செய்த மாபெரும் தவறு என்றும் ஏறுக்கொள்கின்றனர், தலைவரின் சார்பில் எத்தனையோ பேர் மன்னிப்புக்கோரினார்கள், வடக்கைப்போன்றே கிழக்கிலும் இத்தகைய அச்சுறுத்தல்கள் அடிக்கடி தேன்றின திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர், ஏன் அண்மைய கிழக்கின் புலிச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கும் புலிகள் மூதூரில் மேற்கொள்ள முனைந்த இனச்சுத்திகரிப்பு முயற்சியே தொடக்க விழாவாக அமைந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது, ஆனால் இன்னமும் அவர்களது சிந்தனைத்தளத்தில் முஸ்லிம்தேசியவாதம் அங்கீகரிக்கப்படவில்லை, புலிகள் அங்கீகரித்தாலும் இல்லாவிட்டாலும் இருக்கும் யதார்த்தமான தேசியவாதம் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.

நேரடி அரசியல் ஈடுபாடு: முஸ்லிம்களை "இஸ்லாமியத்தமிழர்கள்" என்ற அடைமொழியுடன் அடையாளப்படுத்தும் துரோகத்தனம் என்றோ தொடங்கிவிட்டது, எஸ்.ஜே.வி.செல்வநாயக் தொடங்கி இன்றைய இரா.சம்பந்தன் வரை அந்த அடைமொழி தொடர்கின்றது, இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக த.வி.கூ முஸ்லிம் ஒருவரை தாம் சார்பாக பாராளுமன்றிலும் அமர்த்தியுள்ளது, சட்டத்தரணி இமாம் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள தொடர்பு அவருக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பைவிடவும் குறைவானதே, அத்தகைய ஒரு பொம்மை அடையாளத்தினூடாக முஸ்லிம்களை தமது கபடநாடகத்தினுள் இழுத்துக்கொள்ளும் முயற்சி மிகக்கேவலமானதுவே. முஸ்லிம்களை மறுக்கும் தமிழ்த்தேசியவாதம் நடைமுறை அரசியலிலும் தம்முடன் முஸ்லிம்களை ஈர்த்துக்கொண்டு தமிழர் போடும் எச்சில் இலைக்காக காத்திருக்கும் இழிநிலைக்கும் அவர்கள் போடும் தாளத்திற்கு நாட்டியம் ஆடுபவர்களாகவும் நடத்த முயற்சிக்கும் கபடத்தனம் இன்னமும் எஞ்சியிருக்கின்றது, அஷ்ரப் தனது அரசியல் ஆரம்பமாக தமிழ்ரசுக்கட்சியையும், தமிழ்ர் விடுதலையையும்தான் கையில் எடுத்தார், அண்ணன் அமிர்தலிங்கம் விடுதலை பெற்றுத்தராவிட்டால் தம்பி அஷ்ரப் அதனைப்பெற்றுத்தறுவேன் என்று ஆக்ரோஷமாய்ப்பேசியதும் தமிழர் தன் இரத்ததால் அஷ்ரபிற்கு வீரத்திலகம் இட்டதும் வரலாறு, அதே தமிழரால்தான் அஷ்ரப் தனி அரசியலுக்கும் வந்தார், உயிரும் துரந்தார். இத்தகைய நயவஞ்சகத்தனம் இன்னும் தொடரும் நிலையில் தமிழர் தரப்பு முஸ்லிம் தேசியவாதத்தை எப்படி அங்கீகரிக்கப்போகின்றது?

மேற்குறித்த இரு பாரிய பகுதிகளில் தமிழர்தரப்பின் ஓரவஞ்சனை இன்னோரன்ன அன்றாட நடத்தைகள் பலவற்றிலும் இருக்கத்தான் செய்கின்றது. தேசியவாதம் என்ற எண்ணக்கருவை வெறும் கொள்கையளவில் ஏற்று நடைமுறைவடிவில் மறுதலிக்கும் நிலை மாறவேண்டும், அது முதலில் தமிழர்தரப்பிலிருந்துதான் ஏற்படுத்தப்படவேண்டும், அல்லாதபட்சத்தில் இனத்துவ முரண்பாடு முடிவடையாது....

No comments: