Tuesday, December 18, 2007

இலங்கை முஸ்லிம் சமூக அரசியலில் மாற்றுச்சக்தியின் அவசியம்- இறுதிப்பாகம்- By: A.Azmin

இலங்கை முஸ்லிம் அரசியல் - நேற்று - இன்று - நாளை

நேற்று - 1915 - 2000

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது இலங்கையின் வரலாற்றுடனும் அதன் பாரம்பரிய, கலாசார பண்பாட்டு அம்சங்களுடனும் மிக வலுவான தொடர்பைக் கொண்டது.
கி.மு தொடங்கிய ஆரியரின் வருகையும் அதனைத் தொடர்ந்த இந்துக்களின் வருகையும் இடம்பெற்ற அதே காலத்தில் சர்வதேச கடலோடிகளான அறபிகளுடைய வருகையும் இலங்கையில் நிகழ்ந்திருக்கின்றது. கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே இலங்கையில் இஸ்லாமிய மார்க்கம் அறிமுகமாகின்றது. அன்று தொடங்கி இலங்கை மன்னர்களுடன் முஸ்லிம்களுக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்தன.

இறுதியாக 1815ல் வீழ்ச்சி கண்டி இராசதானியத்தில் முஸ்லிம்கள் கனிசமான பங்கினை வகித்தார்கள் என்பது 2ம் இராஜசிங்க மன்னன் முஸ்லிம்களுக்கு வழங்கிய பரிசில்கள், நன்கொடைகள் என்பவற்றின் மூலம் இன்றுவரை உறுதிப்படுத்தப்படக் கூடியதாக அமைகின்றது.

ஒல்லாந்தருடையதும் போர்த்துக்கீசருடையதுமான ஆட்சிக் காலங்களில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ளாவிடினும்; வர்த்தக ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள் என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலப்பகுதியில் முஸ்லிம்கள் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு சூழலை அவதானிக்க முடியும். பிர்த்தானியரின் அடிப்படைக் கோட்பாடாகிய (Divide and Rule) பிரித்தாளும் போக்கு இலங்கையிலும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டது. இத்தகைய நடைமுறையால் பாதிப்புக்குள்ளான இலங்கைச் சமூகத்தவருள் முஸ்லிம் சமூகமும் அடங்கும்.

1915ல் இடம் பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரம் முஸ்லிம்கள் இலங்கையில் தனியான இனம் என்பதை நிறுவியது. கலவரத்தை அடக்கும் முகமாக சிங்கள சமூகத்தின் முக்கிய தலைவர்களை பிர்த்தானியப் பொலிசார் சிறைப்பிடித்தனர். D.S.சேனாநாயகா, F.R.சேனாநாயகா உட்பட பல தேசியவாதத் தலைவர்கள் சிறைப்பிடிக்கத்தலைப்பட்டனர். அப்போது படித்த இலங்கையர்; சார்பில் தேசியப் பேரவையில் அங்கத்துவம் வகித்த சேர். பொன் இராமநாதன் கடல் மார்க்கமாக பிர்த்தானியா சென்று அங்குள்ள பிரபுக்கள் சபையில் வாதாடி சிறைப்பிடிக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்தார். இதனால் சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் அவர் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தும் சிங்களவர்களால் பாரிய வரவேற்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

12 குதிரைகள் பூட்டிய தேரில் அவரை வரவேற்க முயன்று இறுதியில் உற்சாக மேலீட்டால் சிங்களவர்கள் தமது கரங்களினால் வடம் பிடித்து தேர்இழுத்தனர். அவ்வாறு கொழும்பு பிரதான வீதிகளினூடாக ஊர்வலம் வருகின்ற போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக ஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டன.

இது ஒரு சுமையான வரலாற்றுச் சம்பவம் என்பதை விட இனத்துவத்திற்கான வேர்கள் ஆளவேர்பிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதிநடவடிக்கையேயன்றி வேறில்லை.

உண்மையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்குமான இனத்துவமோதல் என்பதைவிட சிங்கள-தமிழ்-முஸ்லிம்களுக்கான முக்கோணச்சமரின் தொடக்க விழாவே 1915ல் பிர்த்தானியரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சிங்களவர் தரப்பில் மேல்நாட்டுச் சிங்களவர் அல்லது கண்டிச்சிங்களவர் என்றும் கரையோரச் சிங்களவர் என்றும் முஸ்லிம்களில் இலங்கை - இந்திய முஸ்லிம்கள் சோனகர் - மலாயர் என்றும் தமிழர்களில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்றும் மலைநாட்டுத் தமிழர் என்றும் பிரித்தாளும் வடிவங்கள் நீண்டு கொண்டே சென்றன. சேர்.பொன் இராமநாதனுடைய - முஸ்லிம்களும் தமிழர்களே என்ற விவாதத்தை எதிர்த்து A.M.Aஅஸீஸ் முடுக்கிவிட்ட எதிர்வாதங்கள் பொன்னம்பலத்தின் விவாதத்திற்கு ஆப்புவைத்தன.

என்றாலும் முஸ்லிம் தமிழ் உறவில் பொன் இராமநாதன் ஒரு நீங்காத பிரிகோட்டை வரைந்தார் என்றே கொள்ளப்படுகின்றது. 1915 - 1930 வரை சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகளும் 1930 ற்குப் பின்னர் சிங்கள - தமிழ் முரண்பாடாகவும் இலங்கை இனத்துவப் போராட்டத்தில் மூழ்கி இனத்துவ அடையாளத்தையும் வேறுபாட்டையும் ஒரு விதியாகக் கொள்கின்ற துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்பட்டது. அத்தகைய இனத்துவ அடிப்படையில் சிந்திக்கின்ற ஒரு சூழல் இன்றுவரை தொடர்கின்றது.

சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கை அரசியலில் முஹம்மதியர்களுக்கான விஷேட தனியார் (திருமண) சட்டங்கள் 1806 ம் ஆண்டுகளில் பிர்த்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 1905 ல் M.C. அப்துல் காதிர் உடைய துருக்கித் தொப்பிப்போராட்டம் தொடங்கி 1915 வரை பொன் இராமநாதனுடைய தமிழர் அடையாளத்திற்கு எதிரான A.M.A.அஸீஸ் உடைய விவாதங்கள் வரை நோக்குமிடத்து பிர்த்தானியர்களை விடவும் சிங்கள - தமிழ் மக்களுடைய ஆதிக்க எண்ணமே மேலோங்கியிருந்தது.

1930 களில் சோனகர் என்றும் மலாய சமூகத்தவர் என்றும் பிரிந்து கிடந்த முஸ்லிம் சமூக அரசியல் 1939 ல் கூட்டப்பட்ட அரசியல் மாநாட்டைத் தொடர்ந்து வலுவான முஸ்லிம் அரசியல் என்ற நிலைக்குத் திரும்பியது. சோனகர் சமூகப்பிரதிநிதிகள் ராசிக் பரீத் தலைமையிலும் மலாய் சமூகப் பிரதிநிதிகள் T.B.ஜாயா தலைமையிலும் செயற்பட்டனர். இருப்பனும் பிந்திய காலங்களில் கூட்டாக சமூகப் போராட்டம் தொடக்கப்பட்டது. வர்த்தகத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட முஸ்லிம்களின் கல்வி நிலைமை மிக மோசமானதாகக் காணப்பட்டது.

1891ன் கணிப்பின் படி படித்த முஸ்லிம் ஆண்கள் 30.5% பெண்கள் 1.5% மாகவுமே காணப்பட்டது. இந்நிலைமை பின்னர் மிகவும் வீழ்ச்சி கண்டது. முஸ்லிம் அரசியல் வாதிகளின் தலையாய பிரச்சினையாக முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினை அடையாளப்படுத்தப்பட்டது.

சர்வசன வாக்கெடுப்புக்கு முன்னர் - படித்த, பணம் படைத்தோருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. பின்னர் டொனமூர் சீர்திருத்தங்களின் போது சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. எனவே முஸ்லிம்களுடைய வாக்காளர் பலம் சர்வசன வாக்குரிமை வழங்கலூடாக சற்றே முன்னேற்றம் கண்டது. இருப்பினும் கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் கொழும்பு தவிர்ந்த வெளிமாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் அவதானிக்கப்படவில்லை.

மாற்றமாக முறண்பட்ட கருத்துகளும் தன்மைகளுமே வலுவாகக் காணப்பட்டது. குறிப்பாக கிழக்கிலங்கையில் பெறும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள், தாம் கொண்டிருந்த ஆட்புல எல்லையின் அடிப்படையிலும் தமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் கொழும்புத் தலைமைத்துவத்திற்கு அதிக ஈடுபாடு இருப்பதாக உணரவில்லை, காரியப்பர் போன்ற தலைவர்கள் கிழக்கில் அரசியல் நிலைமைகளைத் தீர்மானித்தனர்.

இருப்பினும் பிற்பட்ட காலங்களில் இந்நிலையில் மாற்றங்கள் தோன்றின. கொழும்பு அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்கு மிகக் கிட்டிய காலத்தில் இலங்கை அரசியலில் தமிழ் - சிங்கள பிரிவினைகள் மேலோங்கத் தொடங்கின. டொனமூர் சீர்திருத்த சபையிடம் ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்த 50:50 திட்டம் S.W.R.D.பண்டார நாயக்கா போன்றோரின் சிங்கள மொழி முன்மொழிவுகள் நிலைமையின் மோசமான தன்மையினை எடுத்துக் காட்டுகின்றன. 1931ல் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பானது இனத்துவ ரீதியான பிரதிநிதிகளை தேசிய பேரவைக்குத் தெரிவு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தது என்ற கருத்தும் நிலவுகின்றது.

இவ்வாறாக சுதந்திர இலங்கைக்குள் நுழைகின்ற போது இனத்துவ அடயாளங்களை மிகத் தெளிவாக சுமந்து கொண்டே நுழைந்தோம். இங்குதான் தமிழ் - முஸ்லிம்- முஸ்லிம் - சிங்கள இனத்துவ உறவுகளின் தெளிவான தன்மையும் புரிந்துகொள்தல் வேண்டும். அதாவது தமிழ் - முஸ்லிம் உறவில் உள்ள விரிசல் தமிழ் - சிங்கள உறவில் உள்ள விரிசல் இரண்டும் முஸ்லிம்களை வடகிழக்கிற்கு வெளியில் சிங்களவர்களுடன் கூட்டிணைந்து விட்டது.

எனவே அப்போதைய கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் பெறும்பான்மைக் கட்சிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அதேபோன்றே வடகிழக்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுடன் நல்லிணக்கத்தைப் பேண முற்பட்டதையும் அங்கு நிலவிய அரசியல் உறவுகளை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.

செனட்டர் ராசிக் பரீத் தொடங்கி பதியுத்தீன் மஹ்மூத், மாக்கான் மாக்கார், நெய்னாமரிக்கார், எச்.எஸ். ஸ்மாயில் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் பெறும்பான்மை சமூகத்துடன் கூட்டிணைந்த அரசியல் போக்கையே முஸ்லிம்களுடைய அரசியல் போக்காக கருதினர். இது மிக நீண்ட காலம் செல்லுபடியாகும் போக்காக அமையவில்லை முஸ்லிம் அரசியல் வாதிகளின் சில முற்போக்கான செயற்திட்டங்களால் முஸ்லிம்களின் கல்வி, சமூக, பண்பாட்டு, அம்சங்களிலும் அரச துறை வேலைவாய்ப்புக்களிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்படுத்தப் பட்டது.

இருப்பினும் இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் ஒவ்வொரு இனத்துவக் குழுக்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வாக இப்போக்கு அமையவில்லை. பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் குறித்த ஒரு சமூகம் தனது பெறும்பான்மைப் பலத்தைப் பிரயோகித்து சிறுபான்மைகளை அடக்க முயல்வதும், அவர்களது உரிமைகள் விடயத்தில் பொடுபோக்காக செயற்படுவதும் தவிர்க்க முடியாதது.

அத்துடன் அச்சமூகம் தனது மத, கலாசார அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேவேளை ஏனைய மத, கலாசார அம்சங்களை மதிக்காத சூழல் இன்றுவரை பரவலாக உணரப்படுகின்றது. எனவே பல்லின சமூகம் வாழும் நாடொன்றில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் சமமான அதிகாரப் பகிர்வும் ஆட்சி முறைமையும் அவசியப்படுகின்றன. இது இன்று பொதுவாக உலக அரங்கில் ஏற்று நடைமுறைப்படுத்தும் அம்சம். இந்தியா போன்ற நாடுகள் இதற்குத் தக்க முன்னுதாரணமாக இருக்கின்றன.

இலங்கையில் 1978 வரையான காலப்பகுதியில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியும், ஐ.தேசியக் கட்சியும் சிறுபான்மைகள் விடயத்தில் மிகவும் கடுமையான போக்கையே கடைபிடித்தனர். அதன் உச்சகட்ட வெளிப்பாடே இன்றைய வன்முறைக் கலாசாரமும் யுத்த சூழலுமாகும். குறிப்பாக முஸ்லிம்களுடைய விடயத்தில் இரண்டு பெரும்பான்மைகளும் தமது சுயஉருவத்தை அவ்வப்போது வெளிக்காட்டியே வந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் அவை வன்முறைகளாக வெடித்தன, ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவை தனிப்பட்ட பழிவாங்கல்களாகவே தொடர்ந்தன.

சோனகர் என்றதும் கல்வி, தொழில்வாய்ப்பு, இதர அரச துறைகள், வைத்தியம், கட்டடநிர்மானம், வர்த்தகம், விவசாயம், காணிப்பகிர்வு என ஏராளமான துறைகளில் ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமே வந்துள்ளனர். எனவே இத்தகைய அடக்கு முறைகள் பாரபட்சங்கள் என்பவற்றிற்கு நிரந்தரத் தீர்வு சட்டரீதியான தீர்வாக மட்டுமே அமையும் அன்றி வேறொன்றாக அமையாது. அத்தகைய சட்டரீதியான தீர்வை முன்மொழிவதும் அதற்கான சரியான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்வதும், அத்தீர்வின் நடைமுறை வடிவத்தை உறுதிப்படுத்துவதும், பெறும்பான்மை அரசியல் கட்சிகளுடன் கூட்டிணைந்து கொண்டு அரசியல் நடாத்துவதால் எட்டப்படமுடியாததாகும்.

எனவே இத்தகைய நீண்ட பின்புலத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் தனித்த அரசியல் சக்தியாக மாறவேண்டும் என்ற கருத்து முன்மொழியப்பட்டது. இலங்கை அரசியலில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் ஒரு புதிய பரிமானத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக வடகிழக்கின் தமிழ்ப் பெறும்பான்மைத் தலைவர்கள் இதுவரை காலமும் தம்முல் ஒன்றாக ஒரு பிரிவினர்களாக அடையாளப்படுத்தி அடக்க முற்பட்ட ''தமிழ்ப்போசும் இஸ்லாமியர்கள்" அல்லது இஸ்லாமியத் தமிழர்கள் என்ற முஸ்லிம் சமூகம் தன்னை ஒரு தனித்துவமான இனத்துவம் என்று பிரகடனப்படுத்தியது.

ஏ.எம்.ஏ அஸீஸ் சேர். பொன் இராமநாதனுடன் தொடக்கிய விவாதத்திற்கு விடையாக எம்.எச்.எம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை நிறுவினார். சிங்கள பெறும்பான்மைக் கட்சியினர் முஸ்லிம் காங்கிரஸின் வரவை தூரத்து சவாலாகவே நினைத்தனர். ஆனால் சிங்கள இனவாத, பௌத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழப்போராட்ட அமைபபுக்களும் ''முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய அமைப்பாக" மு.காவைக் கருதினர். குறிப்பாக வடகிழக்கில் வலுப்பெற்றுவந்த தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களை அடக்கியாள முற்பட்டது. தமிழ் அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து செயற்பட்டதைப்போன்று ஆயுதப்போராட்டத்திலும் முஸ்லிம்களை உள் வாங்க முற்பட்டது. ஆனால் தீர்வுகள், கோரிக்கைகள் விடயத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு திட்டமிட்டு மறுக்கப்பட்டு வந்தது. இதனை உணர்ந்தே குறிப்பாக வடகிழக்கை மையப்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் நிறுவப்பட்டது.

தக்பீர் கோஷங்களுடனும், இஸ்லாத்தையும் இஸ்லாமிய விழுமியங்களையும் பாதுகாப்பதற்கும் - இஸ்லாமிய அரசியலை நிறுவுவதற்கான நிறுவன அமைப்பாகவுமே முஸ்லிம் காங்கிரஸ் தோன்றியது. இந்த அடிப்படை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை வெகுவாக வரவேற்கப்பட்டது. வலுவான ஆதரவுத்தளங்கள் குறிப்பாக வடகிழக்கிலும் பொதுவாக இலங்கையெங்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்தது. 1989 - 90 வரையான 10 வருடத்தினுள் 11 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அரசின் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி கண்டது என்றால், அது அந்தக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்களின் உழைப்பு என்பதற்கு அப்பால் அவர்கள் முன்வைத்த ''இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட பிரசாரங்களும் முஸ்லிம் சமூகத்திடம் நிலவிய நீண்டகால அரசியல் வெற்றிடமும் என்பதுவே பொறுத்தம்.

1988 - 2000 வரையான 3 பொதுத்தேர்தல்களும் முஸ்லிம் காங்கிரஸின் பெரிமிதமான வளர்ச்சியைக் காட்டும் அதேவேளை 2000 ற்குப்பிந்திய காலம் உடனடி வீழ்ச்சியைக் குறித்துக் காட்டுகின்றது. முஸ்லிம் சமூக அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் முதல் 2000 ம் ஆண்டு வரையான காலம் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வுகள் நிறைந்த காலமாகும்.

1990 ல் வடக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பலவந்த இனச்சுத்திகரிப்பும் கிழக்கில் அரங்கேரிய மனித படுகொலைகளும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் நடந்தேறிய மிக மோசமான இனத்துவ அராஜகமாகவே கொள்ளப்படுதல் வேண்டும். 1915 ல் நடந்தேறிய கண்டிக்கலவரம் முஸ்லிம்களின் உடமைகளையும் பொருளாதாரத்தளங்களையும் மையப்படுத்தியதாகவே அமைந்தது. அவர்களது இருப்பு குறித்து எவ்வித அச்சப்பாடும் தோன்றியிருக்கவில்லை. அது சிங்கள இனத்துவத்தின் மேலாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடு.

அதற்கு தமிழ்த் தலைவர்களும் பக்க வாத்தியம் வாசித்தனர். ஆனால் 1990 ல் வடகிழக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பும் - மனிதப்படுகொலைகளும் தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களின் இருப்பை பூண்டோடு அழிக்க, வன்முறைக் கலாசாரத்தைப் பயன்படுத்திய வடிவைக் காண்கின்றோம் . எனவே இரு பெறும்பேரினவாதங்களுக்குள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லிம் சமூகம் தனது தெரிவாக முஸ்லிம் காங்கிரஸை தெரிவுசெய்து கொண்டது. தென்னிலங்கையில் பெறும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்திருந்த முஸ்லிம் அரசியல் வாதிகளால் அடையமுடியாத பேரம் பேசும் பலம் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கப்பெற்றது.

இதற்கு எதிராக பெறும்பான்மை சமூகங்கள் தமது திட்டமிட்ட செயற்பாடுகளை தொடக்கிவிட்டன. பொதுவான முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்தும் போக்கில் பெறும்பான்மைக் கட்சிகள் முஸ்லிம் அரசியல் வாதிகளை பெறும்பான்மை வாக்குப்பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். மறுபுறத்தில் சிங்கள பேரினவாத கட்சிகள் இனத்துவேசத்துடன் சிங்கள இனவாத வாக்குகளை சேகரிக்கத் தொடங்கினர். குறிப்பாக JVP - JHU போன்ற கட்சிகள் இனத்துவேச கோசங்களை முன்வைத்தன. அதைவிட மேலான முஸ்லிம் காங்கிரஸின் உட்கட்சிப ;பூசலை வலுவாக்கி கட்சிப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன.

தமிப்பேரினவாத தீவிரவாதிகள் ஆயுதமுனையில் முஸ்லிம் காங்கிரஸை ஒழித்துக் கட்ட முயற்சித்தனர். இத்தகைய இக்கட்டான சூழல் முஸ்லிம்காங்கிரஸின் இருப்பையும் செல்வாக்கையும் மேலும் வலுப்படுத்தின. முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அரசியல் நகர்வாக கருதப்பட்ட தேசிய ஐக்கிய முன்னனி (NUA) முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் ஒழுங்கின் சிறப்பான வடிவமாக கருதப்பட்டது. இருப்பினும் வன்முறையாளர்களின் வெடிகுண்டு - மு.கா தலைவர்களின் மூச்சை நிறுத்தியது.

பெறும்பான்மைக் கட்சிகளின் உட்கட்சிப் பூசல்களுக்கான வேலைத்திட்டம் கட்சியின் மூச்சை நிறுத்தியது. சிங்கள இனவாதக் கோஷங்களும் அதற்கு ஆதரவாக எழுந்த அலைகளும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போக்கை நிலை தடுமாற வைத்தது. இதுவே 2000 ம் ஆண்டு வரையான முஸ்;லிம் அரசியலின் வரலாறாக அமைந்துவிட்டது.

இனவாத சிந்தனைப் படையெடுப்பில் தொடக்கப்பட்ட இலங்கை அரசியலில் முஸ்லிம் அரசியலும் நிர்ப்பந்தமாக இனவாதத்துள் இழக்கப்பட்டது. 1915 - 2000 ஆண்டு முஸ்லிம் அரசியலில் மத்தளமாக இரு பேரினவாதங்களினாலும் மாறி மாறி அடிபட்டுக் கொண்டே வந்திருக்கின்றது. முஸ்லிம்கள் தமக்கான அரசியல் ஒழுங்கை தனித்துவமாக சிந்திக்க சுதந்திரம் பெற்றதன் பின்னர் 40 வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றது. ஆனாலும் இஸ்லாமிய அரசியலின் சரியான வடிவத்தினுள் முஸ்லிம் சமூகம் இன்றுவரை நகரவில்லை என்ற கசப்பான உண்மை இங்கு உணர்த்தப்பட வேண்டும்.

ஆனால் மிகவிரைவில் முஸ்லிம் அரசியல் சீர்படுத்தப்பட வேண்டிய தேவை பலராலும் உணரப்படுகின்றது.


இன்று 2000 ற்குப் பின்னர்

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் படுகொலையைத் தொடர்ந்து மு.காவினுள் தோன்றிய பிளவுகளும், முஸ்லிம் சமூகத்தில் முளைத்துவிட்ட அரசியல் கட்சிகளும், பெரும்பான்மை (UNP- PA) கட்சிகளும், குறிப்பாக பேரினவாதக் கட்சிகளும் (JVP) முஸ்லிம் பிரதிநிதிகளை உள்வாங்கிக் கொள்வது, அமைச்சுப் பதவிகள் தருவது, முக்கிய மேடைகளில் ஏற்றுவது இன்றைய எமது அரசியல் வற்லாராக பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் உரிமைகள், கோரிக்கைகள், அரசியல் இலக்கு என எல்லாமே இழக்கப்பட்டுவிட்ட ஒரு சூழ்நிலையில் இத்தகைய சோடிப்புக்களை பொதுவாக அவதானிக்க முடியும். முஸ்லிம்கள் அரசியல் தலைவர்கள், அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று வந்தவர்கள் அல்ல, சொத்தும், சுகமும் அனுபவிப்புக்களும் அவர்களது எதிர்பார்ப்புக்களாக இருந்ததில்லை. இவை அனைத்தும் அவர்களது அரசியல் வரவுக்கு முன்னர் ஆனால் அரசியல் பிரவேசத்தின் பின்னர் மரணம்வரை அமைச்சுப் பொறுப்பும், சொத்தும்,சுகமும் இலக்குகளாக மாறிப்போகும் நிலையே இன்றைய முஸ்லிம் அரசியலின் இலட்சினை.

சிங்கள பேரினவாதம் ஒருபுறம் தமிழ்த் தீவிரவாதம் மறுபுறமாக முஸ்லிம் சமூகத்தைத் தாக்கியழிக்கும் நேரத்திலும் முஸ்லிம் அரசியலின் அறிக்கை அரசியலில் மாற்றமில்லை. சில நிகழ்வுகளைக் குறித்துப் பேசுவதை விடவும் பொதுவாக எடுத்து நோக்கினால்.

  • தென்னிலங்கையின் இனவாத வன்முறைகள் - இனத்துவேச முயற்சிகள்.
  • வடகிழக்கில் தீவிரவாதத்தின் அடாவடித்தனங்கள் படுகொலைகள் - இனச்சுத்திகரிப்புக்கள்.
  • சுனாமி அனர்த்த நிவாரணத்தில் காட்டப்படும் பாரபட்சங்கள்.
  • நில அபகரிப்புக்கள் - வர்த்தக, பொருளாதார முடக்கங்கள்.
  • இனப்பிரச்சினைத்தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் திட்டமிட்ட புறக்கணிப்புகள்.

என முஸ்லிம் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் தொடரும் அதேவேளை - முஸ்லிம் அரசியல் இவற்றுக்குத் தரும் தீர்வுகள் எதுவும் காத்திரமாக அமைவதாகத் தெரிவதில்லை. இவை நிகழ்கால் யதார்த்தங்கள்.

சிவில் சமூக அரசியல் முன்னை விட சற்று முனைப்புடன் செயற்படுவதாகத் தென்படுகின்ற பொழுதும் அதன் வகிபாகம் எந்தளவுக்கு முஸ்லிம் அரசியலில் தாக்கமுடையதாக இருக்கின்றது. என்பது இன்னமும் தெளிவில்லாமலேயே தொடர்கின்றது. MCSL - முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் சிவில் சமூகம் சார்பாக காத்திரமான நகர்வுகளை மேற்கொண்ட பொழுதும் அதனால் முஸ்லிம் அரசியலை நேரான பாதைக்குக் கொண்டுவர முடியும், என்று கூறமுடியாது.

அதற்கு நியாயமான பல காரணிகள் எமது சமூகத்தில் இன்னும் நிலவுகின்றன. ஆனாலும் குறிப்பாக இப்பிரச்சினை விவாகரத்தில் முஸ்லிம் கவுன்சில் காத்திரமான அழுத்தத்தை பிரயோகிக்க போதுமானது.

பொதுவாக இலங்கையின் அரசியலின் தற்போதைய ஸ்திரமற்ற தன்மையும், இனப்பிரச்சினையின் பல்பட்ட தன்மையும் முஸ்லிம்களின் அரசியல் குறித்த அவதானத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. ஆனால் முஸ்லிம்களின் அரசியல் சார்ந்த மிகச்சரியான நிலைப்பாடுகளை பலமாக வெளிப்படுத்த வேண்டிய இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய இலக்கற்ற அரசியல் போக்கானது முஸ்லிம் சமூக அரசியல் குறித்த பல கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளது.

நாளை

இதே நிலையில் முஸ்லிம் அரசியல் தொடருவது ஒரு ஆரோக்கியமான அறிகுறியாக அமையாது. தற்போதைய முஸ்லிம் கட்சிமுறைமைகளும் சந்தர்ப்பவாத அரசியலும் நாளடைவில் முஸ்லிம் சமூகத்தால் புறக்கணிக்கப்படும். ஏனெனில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தேவை எவ்வளவு யதார்த்தமானதோ அதே போன்று அத்தேவை இஸ்லாமிய அடிப்படைகளில் நின்றே நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும் யதார்த்தமானது.

இதனையே முஸ்லிம் காங்கிரஸின் வரவும் அது சுமந்து வந்த ''இஸ்லாமிய அரசியல்" பிரச்சாரமும் அதற்கு தோள்கொடுத்த முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுத்தளமும் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் சமூகம் அதன் மார்க்கத்தின் பால் கொண்டுள்ள அபரிமிதமான பற்றும் இதற்குக் காரணமாகும். எனவே முஸ்லிம் சமூகத்தின் நாளைய அரசியல் இஸ்லாத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இலகுவாக மேற்கொள்ளும் அரசியலாக அமையாது.

இலங்கை போன்ற அனைத்து வளங்களும் நிறைவாகக் கொண்ட தேசமொன்றை இனவாதம் என்ற குறுகிய சிந்தனையால் சூறையாடும் பெறும்பான்மை அரசியல் வாதிகளாயினும் சிறுபான்மை அரசியல், தீவிரவாத சக்திகளாயினும், அந்நிய ஆதிக்கங்களாயினும் இலங்கையின் பொதுநலன், தேசிய அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் சக்தியால் நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே அத்தகைய பலம் பொருந்திய சக்தியின் பிரதான கர்த்தாவாகவோ அல்லது சாதாரண பங்காளியாகவோ முஸ்லிம் சமூகம் தன்னை அமைத்துக் கொள்ளவேண்டும்.

இலங்கையில் புறையோடிப்போயுள்ள பல நூற்றாண்டுகள் பலமை பொருந்திய இனத்துவப் போக்கை உடைத்தெறிய முடியாவிடினும் அதனால் தேசிய அபிவிருத்திக்கும் பொதுநலன்களுக்கும் ஏற்படும் பாதகங்களையாவது தடுத்து நிறுத்தமுடியும் இதுவே முஸ்லிம்களின் நாளைய அரசியல் அமைப்பாக இருத்தல் அவசியமாகும்.

எமது இளைஞர்கள், எமது சந்ததிகள், எமது மார்க்கம் என எல்லாவற்றின் நலன் குறித்தும் மிகப் பொதுவாக பரந்தளவில் சிந்திக்கும் எவரும் இத்தகைய முடிவை நோக்கி வருவதே மிகப் பொறுத்தமானதும் முற்போக்கானதுமாகும்.

முற்றும்

1 comment:

Anonymous said...

its true, masha allah thangs youre article